×

மீண்டும் காற்றுடன் மழை; குளிரால் மக்கள் அவதி

 

ஊட்டி, ஜூலை 25: நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சற்று மழை குறைந்த நிலையில் மீண்டும் நேற்று முதல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தூங்கி இரு மாதங்கள் செய்யும். இந்த மழையின் போது மரங்கள் விழுவது, மண் சரிவு ஏற்படுவது வாடிக்கை. இம்முறை கடந்த மாதம் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாத நிலையில், கடந்த 10 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வந்தது. ஊட்டி கூடலூர் குந்தா மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான மரங்கள் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதேபோல் பல இடங்களில் வாகனங்களின் மீது மரங்கள் விழுந்ததால் வாகனங்கள் சேதம் அடைந்தன. ஒரு சில குடியிருப்புகளும் சேதமடைந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் மழையின் தாக்கம் சற்று குறைத்து காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் நேற்று காலை முதல் மீண்டும் ஊட்டி குந்தா போன்ற பகுதிகளில் மீண்டும் காற்றுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ஊட்டி – கூடலூர் சாலை சாண்டிநல்லா அருகே மரம் ஒன்று விழுந்தது. இதனால் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு சென்று தீயணைப்புத்துறையினர் அந்த மரத்தை வெட்டி அகற்றினர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து துவங்கியது. மீண்டும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

The post மீண்டும் காற்றுடன் மழை; குளிரால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு பேருந்து கடத்தல்