ஆந்திராவில் நெற்பயிர்களை மூழ்கடித்திருந்த இடுப்பளவு வெள்ளத்தில் இறங்கி ஒய்.எஸ்.ஷர்மிளா போராட்டம்: விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய கோரிக்கை

திருமலை: ஆந்திராவில் நெற்பயிர்களை மூழ்கடித்திருந்த இடுப்பளவு தண்ணீரில் இறங்கி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரி ஒய்.எஸ்.ஷர்மிளா போராட்டம் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேப்பள்ளி குடேம் நந்தமுரு கிராமத்தில் மழை மற்றும் கோதாவரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் மூழ்கிய விவசாய பயிர்களை ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கட்சியினருடன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு வெள்ளப்பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது விவசாய நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பெரிய குளம் போல் இருப்பதை பார்வையிட்ட ஷர்மிளா அதில் இறங்க முயன்றார். கட்சியினர் வேண்டாம் எனக்கூறி தடுத்து நிறுத்த முயன்றும் அவர் அதில் இறங்கி அதன் கிழ் இருந்த நெற்பயிர்களை கையில் ஏந்தி சிறிது நேரம் போராட்டம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது ஒய்.எஸ்.ஷர்மிளா கூறியதாவது: இதே நிலை தொடர்ந்தால் யாரும் விவசாயம் செய்ய முடியாது. அரசு உடனடியாக விவசாயிகளுக்கு உதவ வேண்டும். இந்த தொகுதியில் மட்டும் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. விவசாயிகள் இதுபோன்ற கஷ்டத்தில் இருந்தாலும் அரசு கண்டுகொள்ளவில்லை. தெலங்கானாவில் விவசாய கடன்களை ரேவந்த் ரெட்டி அரசு தள்ளுபடி செய்தது. அதேபோன்று சந்திரபாபு நாயுடு அரசும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆந்திராவில் நெற்பயிர்களை மூழ்கடித்திருந்த இடுப்பளவு வெள்ளத்தில் இறங்கி ஒய்.எஸ்.ஷர்மிளா போராட்டம்: விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: