ஏரி உபரிநீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம் பெரணமல்லூரில் அதிகாரிகள் அதிரடி

பெரணமல்லூர், ஜூலை 25: பெரணமல்லூர் பெரிய ஏரியில் உபரிநீர் வெளியேறும் கால்வாய் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அகற்றினர். பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள சித்தேரி, பெரிய ஏரி மூலம் விவசாயிகள் மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கி வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், குடிநீர் ஆதாரங்களுக்கு திறந்தவெளி மற்றும் ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரிய ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற 2 இடங்கள் உள்ளது. இதில், ஒரு இடத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் மழைக்காலத்தில் உபரிநீர் சீராக வெளியேறாமல் தண்ணீர் தேங்கி விவசாயம் செய்ய முடியாமல் பலர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி விவசாயிகள் உபரிநீர் வெளியேறும் கால்வாய் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். தொடர்ந்து, அங்கு ஆக்கிரமிப்பு செய்துள்ள விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சார்பில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அதனை விவசாயிகள் கண்டு கொள்ளாமல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், நேற்று அதிரடியாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பரந்தாமன் தலைமையில் பொக்லின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. அப்போது, விவசாயிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், உதவி பொறியாளர் நோட்டீஸ் அனுப்பிய விவரத்தை தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காக பெரணமல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post ஏரி உபரிநீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம் பெரணமல்லூரில் அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: