ஆம்ஸ்ட்ராங் கொலையில் 2 வக்கீல்கள் கைது: சம்பவ செந்திலைப் பிடிக்க போலீஸ் தீவிரம்; காவலில் எடுக்கப்பட்ட 4 பேரையும் தனி இடத்தில் வைத்து விசாரணை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வக்கீல்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஹரிகரன், பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தமாகவில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் ஹரிகரனிடம் 5 நாட்களும் மற்ற 3 பேரிடம் 3 நாட்களும் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கி உளளது.

ஹரிகரனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ செந்திலுக்கும், வழக்கறிஞர் ஹரிஹரனுக்கும் 10 ஆண்டு கால நட்பு குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் கொலையாளிகளுக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்துள்ளார்கள். யார் யார் பணம் கொடுத்தார்கள் உள்ளிட்ட விவரங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். வெவ்வேறு எண்களில் இருந்து விபிஎன், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் கால் போன்ற தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மட்டுமே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சதி திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற தொழில்நுட்ப வசதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சம்பவ செந்தில் ஹரிஹரனுக்கு ஆலோசனை வழங்கியதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சம்பவ செந்தில் எங்கு தங்குவார் என்பது குறித்தும், நேபாளத்தில் அவர் அடிக்கடி சென்று வந்ததற்கான விவரங்கள் குறித்தும் ஹரிஹரனுக்கு தெரியுமா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவ செந்திலுக்கு பக்கபலமாக இருக்கும் அரசியல் பெரும்புள்ளிகள், தொழிலதிபர்கள், ஓய்வுபெற்ற காவல் துறையினர் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் காவலில் எடுத்துள்ள பொன்னை பாலு, ராமு, வழக்கறிஞர் அருள் ஆகியோரிடமும் தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்பவ செந்திலுக்கு யாரிடம் இருந்து மாமுல் வருகிறது என்ற பட்டியலை போலீசார் தயார் செய்து வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் எந்தெந்த தொழிற்சாலைகள், தொழிலதிபர்கள், பைனான்சியர்கள் ஆகியோரிடம் எந்தெந்த வகைகளில் சம்பவ செந்திலுக்கு பணம் வருகிறது என்ற விவரங்களை திரட்டும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் சம்பவ செந்திலுக்கு நெருக்கமான வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக், திருவான்மியூரைச் சேர்ந்த சிவகுருநாதன் ஆகிய ஆகிய 2 வக்கீல்களை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள்தான், வக்கீல் ஹரிதரனுடன் சேர்ந்து சம்பவ செந்திலுக்கும், கூலிப்படையினருக்கும் இணைப்பு பாலமாக இருந்துள்ளனர். இதனால் சம்பவ செந்தில், இருப்பிடம் இருந்தும், அவருக்கு உள்ள தொடர்பு குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* தடயங்கள் சேகரிப்பு
காவலில் எடுக்கப்பட்ட ஹரிகரன், அருள், பொன்னை பாலு, ராமு ஆகியோரை சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்புக்கு அழைத்து சென்று கொலை தொடர்பான தடயங்களை சேகரிக்க, உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் உடன் சென்றனர். கொலையாளிகளின் வாக்குமூலத்தை தொழில்நுட்ப ஆதாரத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போலீசார், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பவ இடத்தில் 11 செல்போன்கள் இருந்த நிலையில் அவை உடைக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதால் அதையும் பறிமுதல் செய்துள்ளனர்.

செல்போன்கள் உடைக்கப்பட்டு இருப்பதால் அதன் பாகங்களை காவல் ஆணையர் சைபர் கிரைமில் கொடுத்துள்ளனர். கொலை செய்த சம்பவத்தில் கொலையாளிகள் யாருடன் தொடர்பு கொண்டார்கள், லைவ் லோகேஷன் யாருக்கு பரிமாறப்பட்டது என்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரம் கட்டி வருகின்றனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலையில் 2 வக்கீல்கள் கைது: சம்பவ செந்திலைப் பிடிக்க போலீஸ் தீவிரம்; காவலில் எடுக்கப்பட்ட 4 பேரையும் தனி இடத்தில் வைத்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: