தாம்பரத்தில் சிக்னல் மேம்பாட்டு பணிகள் தொடக்கம்: செங்கோட்டை ரயிலில் பயணிக்க இணைப்பு ரயில்கள் பயன்படுத்த வசதி

நெல்லை: தாம்பரத்தில் சிக்னல் மேம்பாட்டு பணிகள் முடியும் வரை நெல்லை, தென்காசி மாவட்ட பயணிகள் இணைப்பு ரயில்களை பயன்படுத்தி பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் பணிமனையில் பொறியியல் மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் தொடங்கிய நிலையில், தென்மாவட்ட ரயில்களின் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் வரும் 31ம் தேதி வரை இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்ட நிலையில், தென்மாவட்டத்தில் இருந்து சில ரயில்கள் பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக 20684 செங்கோட்டை – தாம்பரம் எக்ஸ்பிரஸ் விழுப்புரம் வரை தான் இயக்கப்பட உள்ளது.

செங்கோட்டையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் இந்த ரயிலை பயன்படுத்தி தென்காசி, நெல்லை மாவட்ட பயணிகள் சென்னை சென்றனர். இந்த ரயில் வரும் 31ம் தேதி வரை விழுப்புரம் வரை மட்டும் செல்லும் என்பதால், இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகள் விழுப்புரத்தில் இறங்கி நெல்லை, முத்துநகர், சேது எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களை பிடித்து தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் செல்லலாம். பயணிகள் அதற்கு ஏற்றவாறு தங்கள் பயண திட்டங்களை மேற்கொள்ளலாம் என ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதே போல் மறுமார்க்கத்தில் 20683 தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயில் இன்று 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை தாம்பரத்திற்கு பதிலாக விழுப்புரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் தாம்பரத்தில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு வந்தது. இன்று முதல் விழுப்புரத்தில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு, நெல்லை வழியாக செங்கோட்டை போய் சேரும். இந்த ரயிலை விழுப்புரத்தில் பிடிக்க முற்படுவோர், தாம்பரத்தில் இருந்து சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி விரைவு ரயில் மூலம் விழுப்புரம் வந்து, அங்கிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் 20683 தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயிலை எளிதாக பிடிக்கலாம். ரயில்களுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்திருக்கும், நெல்லை, தென்காசி மாவட்ட பயணிகள் குறிப்பிட்ட இணைப்பு ரயில்களை பயன்படுத்தி, பயன் அடையுமாறு நெல்லை, தென்காசி மாவட்ட பயணிகள் சங்கத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

The post தாம்பரத்தில் சிக்னல் மேம்பாட்டு பணிகள் தொடக்கம்: செங்கோட்டை ரயிலில் பயணிக்க இணைப்பு ரயில்கள் பயன்படுத்த வசதி appeared first on Dinakaran.

Related Stories: