தமிழ்நாட்டை போல் கர்நாடக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்: நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற திட்டம்

பெங்களூரு: நீட் தேர்வில் தேசியளவில் முறைகேடு நடந்துள்ளதாலும், கர்நாடக மாநில மாணவர்கள் பாதிக்கப்படுவதால், தமிழ்நாட்டை போல், கர்நாடகாவில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் பெரியளவில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நடந்து வருகிறது.

இதனிடையில் தென்மாநிலங்களில் நீட் தேர்வு அறிமுகம் செய்த காலம் முதல் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டு மொத்தமாக அரசுடன் இணைந்து அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் உள்பட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற குரலும் தமிழ்நாட்டில் இருந்து எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு காரணமாக தற்போது விழித்து கொண்டுள்ள கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறது. தமிழ்நாட்டை போல், கர்நாடக மாநில அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை உறுதி செய்து வருகிறது.

நீட் தேர்வு ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைத்து வருவதாக முதல்வர் சித்தராமையா வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார். தற்போது நடந்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றியது போல், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இரண்டாமாண்டு பியூசி தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று கர்நாடக சட்டப்பேரவை மற்றும் மேலவையில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அமைச்சரவை நேற்று முடிவு செய்துள்ளது.

The post தமிழ்நாட்டை போல் கர்நாடக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்: நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: