பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் பாலு(37). எம்பிஏ பட்டதாரியான இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் சின்ன வெங்காயம், நெல், கடலை, மக்காச்சோளம் சாகுபடி செய்து வந்தார். இந்நிலையில் கொரோனா காலத்தில் தோட்டக் கலைத்துறை மானிய உதவியுடன் 60 சென்டு நிலத்தில் தூண்கள் அமைத்து, பந்தல் முறையில் பீர்க்கங்காய், பாகற்காய், சுரைக்காய், புடலங்காய் சாகுபடியில் ஈடுபட்டார். பின்னர் அதே தூண்களை கொண்டு 2022ம் ஆண்டு ஜூன் மாதம் தாய்லாந்து நாட்டின் புகழ்பெற்ற டிராகன் பழம் சாகுபடி செய்து வருகிறார். விதைத்து 3ஆண்டுகளுக்குப் பிறகு முழு பலன்களை அளிக்கும் இந்த டிராகன் ஃபுரூட் பழச்செடிகள் தற்போது 2 ஆண்டுகளிலேயே காய்த்துப் பழுத்து விற்பனைக்கு வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விவசாயி பாலு கூறியதாவது: தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்திலும், விருதுநகர் மாவட்டம், விளாத்திகுளம் பகுதிகளிலும் டிராகன் ஃபுரூட் சாகுபடி தொழில் நுட்பத்தை கேட்டறிந்து 2022ல் தொடங்கினேன்.
தற்போது நாளொன்றுக்கு 4 கிலோ முதல் 5 கிலோ பழங்கள் கிடைக்கின்றன. இவற்றை கிலோ ரூ.200க்கு உழவர் சந்தையிலும், தினசரி காய்கறி மார்க்கெட்டிலும் விற்று விடுகிறேன். 1 தூணுக்கு 4 செடி உள்ளது. 1 ஆண்டுக்கு ஒரு தூண் கணக்கில் 200 கிலோ பழங்கள் கிடைக்கும். தொடர்ந்து தூண்கள் சரியாமல் செடிகளை கவாத்து செய்து பராமரித்து வந்தால் நீண்ட நாட்களுக்கு டிராகன் ஃபுரூட் செடிகள் பலன் கொடுக்கும். 3 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு பழங்கள் உற்பத்தி அதிகரிக்கும் போது திருச்சி, சேலம் மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்றார். வறண்ட பூமியான பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே திராட்சை, முட்டைக்கோஸ், காலிபிளவர், நூல்கோல், பேரிச்சம்பழம் போன்ற சாகுபடிகளில் சாதித்த விவசாயிகள் உள்ள நிலையில், தற்போது டிராகன் பழ சாகுபடியில் விவசாயி சாதித்து வருவது அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
The post பெரம்பலூரில் டிராகன் பழம் சாகுபடி: எம்பிஏ பட்டதாரி அசத்தல் appeared first on Dinakaran.