* 3 மணிநேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம்
* குருபவுர்ணமியையொட்டி காய்கறி அலங்காரம்
சித்தூர் : சித்தூரில் பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் 3மணிநேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், குருபவுர்ணமியையொட்டி கேரியல் வளாகத்தில் பல்வேறு காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து அவர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்கின்றனர்.
இதனால் வரசித்தி விநாயகர் கோயிலில் எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில் பள்ளி, அலுவலகங்களுக்கு நேற்று விடுமுறையால் வழக்கத்தை விட காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும், காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இதனையொட்டி காலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், நேற்று குருபவுர்ணமியையொட்டி கோயில் வளாகம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கொடிமரத்திற்கு காய்கறி அலங்காரமும், காய் கனிகளை கொண்டு சுவாமி உருவம், வாத்து, மயில் உள்ளிட்டவை தத்ரூபமாக அமைக்கப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பச்சை மிளகாயில் விநாயகர் அலங்காரமும், கத்தரிக்காய், கேரட், முருங்கை, வெண்டை, தக்காளி ேபான்றவை மாலை செய்து, அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மேலும், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு மோர், குடிநீர் உள்ளிட்டவை தடையின்றி வழங்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களுக்கு கோயில் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பக்தர்களின் வருகை அதிகரித்ததால் கோயில் பார்க்கிங் முழுவதும் நிரம்பி சாலையோரங்களில் வாகனங்கள் அணிவகுத்தபடி நின்றன. இதனால் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட கடைகளில் விற்பனை களைகட்டி வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
The post ஞாயிறு விடுமுறை தினமான நேற்று காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் appeared first on Dinakaran.