ஆபத்தான நிலையில் இருக்கும் பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை

 

ஏழாயிரம்பண்ணை, ஜூலை 22: குண்டாயிருப்பு பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் குண்டாயிருப்பு ஊராட்சி பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆலங்குளம் மற்றும் வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் அங்கு பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தால் மக்கள் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2012-13ம் ஆண்டு ரூ.2 லட்சம் செலவில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அதன் பிறகு பஸ் நிறுத்தத்தில் நின்று தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு அப்பகுதி மக்கள் சென்று வந்தனர்.

இந்நிலையில், தற்போது வரை பராமரிப்பின்றி அந்த பேருந்து நிறுத்தத்தை சுற்றிலும் புதர்கள் மண்டிக்கிடப்பதோடு சுவர்கள் இடிந்து விழும் நிலையில் கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. இதனால் பயணிகள் பேருந்து நிறுத்தம் இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனும் மேலும் அங்குள்ள புதர்களை கண்டு பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தீண்டிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே பேருந்து நிறுத்தம் முன்பு உள்ள புதர்களை அகற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஆபத்தான நிலையில் இருக்கும் பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: