கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவல்: 14 வயது சிறுவனுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை : கட்டுப்பாட்டு அறை திறப்பு

 


திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்த 14 வயது சிறுவனுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் முதன்முதலாக பரவியது. அப்போது பெரும் பீதியை ஏற்படுத்திய இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்தனர். 2021ல் ஒரு 12 வயது சிறுவனும், 2023ல் 2 பேரும் பலியானார்கள். இந்நிலையில் கேரளாவில் மீண்டும் நிபா பரவியது தெரியவந்துள்ளது.

மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இந்நிலையில் சிறுவனின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கோழிக்கோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனின் உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு கோழிக்கோட்டிலுள்ள நுண்ணுயிரி பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த சிறுவனுக்கு நிபா வைரஸ் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். நோய் பாதித்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மலப்புரத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. நோய் பாதித்த சிறுவன் வீட்டின் 3 கிமீ சுற்றளவில் உள்ள பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து யாரும் வெளியேறவோ, அந்தப் பகுதிக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவல்: 14 வயது சிறுவனுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை : கட்டுப்பாட்டு அறை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: