தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில், சார்பதிவாளரின் காரை துரத்திச் சென்று மடக்கி கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்பதிவாளரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, சார்பதிவாளராக இருப்பவர் சாய்கீதா (58). இவர் அங்கீகரிக்கப்படாத நிலங்களுக்கு லஞ்சம் பெற்று, பத்திரப்பதிவு செய்வதாக ஏராளமான புகார்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்றது. அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவாளர் சாய்கீதாவை கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை என்பதால் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது.
இரவு லஞ்ச பணத்துடன் சாய்கீதா வீட்டிற்கு செல்வதாக கிடைத்த தகவலின்படி, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரது காரை பின்தொடர்ந்து சென்றனர். கெலமங்கலம் சாலையில் சென்றபோது, அவ்வழியாக டூவீலரில் வந்த வாலிபர் காரை நிறுத்தி பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டது. இதனை பார்த்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காரை துரத்திச் சென்று, கெலமங்கலம் பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகே மடக்கிப் பிடித்தனர். பின்னர் காரில் சோதனை செய்தனர். அதில் ரூ.6 லட்சத்து 35 ஆயிரத்து 500 இருந்துள்ளது. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் சாய் கீதாவை கைது செய்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். சார்பதிவாளர் சாய்கீதா ஏற்கனவே ஓசூரில் லஞ்ச புகாரில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வீட்டில் சோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
The post காரில் சென்றவரை துரத்தி பிடித்தனர் கட்டுக்கட்டாக லஞ்ச பணத்துடன் பெண் சார்பதிவாளர் கைது appeared first on Dinakaran.