பில்கிஸ் பானு வழக்கில் 2 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு மோடி முதல்வராக இருந்தபோது நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடந்த கலவரத்தின்போது கர்ப்பிணி பெண் பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. மேலும் பானுவின் உறவினர்களையும் கொன்றனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை தண்டனை காலம் முடியும் முன்பே கடந்த 2022ம் ஆண்டு விடுதலை செய்து குஜராத் அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 11 பேரின் விடுதலையை ரத்து செய்தது.

இந்த வழக்கில் குற்றவாளிகளான ராதேஷாம் பகவான்தாஸ் ஷா மற்றும் ராஜூபாய் பாபுலால் சோனி ஆகியோர் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர் அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. அதனால் மறுஆய்வு மனு மீது தீர்ப்பு வரும் வரை இடைக்கால ஜாமீன் வழங்க கோரி இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த மனு விசாரணைக்கு உகந்தது என எப்படி கூற முடியும்? இதில் உங்களின் அடிப்படை உரிமைகள் எங்கு பாதிக்கப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்பி மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

 

The post பில்கிஸ் பானு வழக்கில் 2 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: