அப்பத்தாஸ் அடுப்படி!

நன்றி குங்குமம் தோழி

‘‘நகை… பணம்… எது கொடுத்தாலும், போதும் என்று சொல்ல நமக்கு மனம் வராது. நாம் போதும் என்று சொல்லுவது சாப்பாடு மட்டும்தான். அப்படி ஒருவருக்கு வயிறார சாப்பாடு போடுவது நமக்கு பிடித்த விஷயமாக இருந்தால் அதில் கிடைக்கும் ஒரு ஆத்ம திருப்தி வேரெதிலும் கிடைக்காது’’ என பேசத் துவங்கினார் சென்னை வளசரவாக்கம், ‘அப்பத்தாஸ் அடுப்படி’ என்ற க்ளவுட் கிச்சனின் நிறுவனர் ப்ரீத்திமா தேவராஜன்.

‘‘நான் ஆர்க்கிடெக்கில் முதுகலை முடிச்சிருக்கேன். அப்பாவுக்கும் கட்டிடக்கலை துறை சார்ந்த வேலை என்பதால், அவரைப் பார்த்துதான் எனக்கு இந்த கட்டிட வடிவமைப்பில் ஆர்வம் ஏற்பட்டது. படிப்பு முடிச்சிட்டு, அப்பாவுடன் சேர்ந்து வீடு மற்றும் அலுவலகங்களுக்கு இன்டீரியர், 3டி டிசைனிங் எல்லாம் செய்து கொடுத்திருக்கேன். தற்போது ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்க்கிறேன். எனக்கு பிடிச்ச படிப்பு, வேலை எல்லாம் இருந்தாலும், எனக்கு சாப்பாடு மேல் தனிப்பட்ட ஈர்ப்பு என்றுமே உண்டு. எங்க ஊர் காரைக்குடி. அந்த ஊருக்கு என தனி உணவு மனம் உள்ளது. அப்படி இருக்க, அதை எப்படி என்னால் விட முடியும்’’ என்ற ப்ரீத்திமா ‘அப்பத்தாஸ்’ அடுப்படி க்ளவுட் கிச்சன் ஆரம்பித்தது பற்றி விளக்குகிறார்.

‘‘இந்த க்ளவுட் கிச்சன் ஆரம்பித்து 11 வருடங்களாகிறது. ஆரம்பித்த போது இதற்கு தனிப்பட்ட பெயர் எல்லாம் வைக்கல. முதலில் தெரிந்தவர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், அலுவலகம் மற்றும் கல்லூரி, பள்ளிக்கு போகும் மாணவ, மாணவிகளுக்குதான் சமைத்து கொடுத்து வந்தோம். சென்னையில் வேலைக்கு அல்லது படிக்க பெரும்பாலானவர்கள் வெளியூரில் இருந்துதான் வருகிறார்கள். அவர்களால் தினமும் சமைக்க முடியாது.

அதே சமயம் ஆரோக்கியமான உணவும் கிடைக்காது என்பதால், வீட்டுச் சுவையில் காரைக்குடி ஸ்டைலில் சாப்பாடு ஏன் கொடுக்கக் கூடாது என்று தோன்றியது. வீட்டில் சொன்ன போது உணவு துறைப் பொறுத்தவரை நமக்கான தனிப்பட்ட நேரம் ஒதுக்க முடியாது. ஊருக்கு போக முடியாது, மேலும் எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியாது. அதனால் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நான் உணவுத் துறையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியா இருந்ததால், ‘முயற்சி செய்துப் பார்க்கிறேன். சரியா வரலைன்னா பார்க்கலாம்னு’ சொல்லி வீட்டில் சம்மதம் வாங்கினேன். எங்களின் முயற்சிக்கு கொரோனா காலத்தினை பயன்படுத்திக் கொண்டோம்’’ என்றவர் அப்பத்தா என்று பெயர் வைக்க காரணத்தையும் கூறினார்.

‘‘சின்ன வயசில் பாட்டியிடம்(அப்பத்தா)தான் நான் வளர்ந்தேன். என்னுடைய பெரும்பாலான நேரத்தை அவர்களுடன்தான் நான் செலவிட்டிருக்கேன். அவங்க எனக்கு ஒரு நல்ல தோழியாதான் இருந்தாங்க. நல்லது, கெட்டது சொல்லிக் கொடுப்பாங்க. அதனால்தான் அவங்க பெயரை என்னுடைய பிராண்டா வைத்தேன். மேலும் அப்பத்தா என்றால் எல்லோருக்கும் ஒருவித கனெக்‌ஷன் இருக்கும். மறக்க முடியாது. பெயரும் வித்தியாசமா இருந்தது. அப்படித்தான் ‘‘அப்பத்தாஸ் அடுப்படி’’ என்ற பெயர் வந்தது. நம்ம வீட்டில் எப்படி சமைப்போமோ அப்படித்தான் எங்க சமையல் இருக்கும். செட்டிநாடு உணவுகளுக்கு பயன்படுத்தும் மசாலாப் பொருட்களை ஒவ்வொன்றாக பார்த்து உணவுகளை தயாரித்தோம்.

அது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. தற்போது சென்னையில் உள்ள அனைத்து ஏரியாக்களிலும் நாங்க உணவினை வழங்கி வருகிறோம். உணவு மட்டுமில்லாமல், ஸ்நாக்ஸ், பொடி, தொக்கு போன்றவைகளும் தயாரிக்கிறோம். நாங்க சமைக்கும் ரெசிபிகள் அனைத்தும் என் அப்பத்தாவுடையது. ஒவ்வொரு உணவுக்கான அளவு என்ன… எப்படி சமைக்கணும்னு அவரிடம் கேட்டு எழுதி வச்சிருக்கேன். அவங்க மேற்பார்வையில்தான் இங்கு ஒவ்வொரு உணவும் தயாரிக்கப்படுகிறது.

எங்களுடைய இந்த கிச்சனில் வேலை செய்பவர்கள் அனைவரும் எங்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அம்மா, பாட்டிகள், தங்கை, மாமியார், கணவர், குழந்தைகள்… இவங்கதான் இந்த கிச்சனை இயக்குறாங்க. வளசரவாக்கத்தில் மூன்று கிளைகள் இருக்கு. ஆரம்பிக்கும் போதே கேட்டரிங் மற்றும் ஸ்நாக்ஸ், ரெடிமிக்ஸ் என இரண்டு கிளையாகத்தான் துவங்கினோம். திருமணம், வீட்டு விசேஷங்களுக்கும் கேட்டரிங் செய்கிறோம்.

எங்க கிச்சனுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பொடி வகைகளுக்கு எங்க வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து பயிர் செய்து வருகிறோம். உதாரணத்துக்கு, பிரண்டை நகரங்களில் அவ்வளவாக கிடைக்காது. அது உடலுக்கு மிகவும் நல்லது. அதனை மாடித் தோட்டத்தில் பயிர் செய்திருக்கிறோம். அதில் இருந்து பொடி தயாரிக்கிறோம். ரோஸ்மில்க், ஒரிஜினல் ரோஜா இதழ்களில் இருந்து சாறு எடுக்கிறோம். எங்கள் கிச்சனில் ஒவ்வொரு உணவும் மிகவும் ஆரோக்கிய முறையில் தயாரிக்கப்படுகிறது.

இதுபோக பால் சார்ந்த உணவுகளுக்கு கோசாலையில் இருந்து சீம்பால் கொள்முதல் செய்து கருப்பட்டி சீம்பால் போன்ற இனிப்புகள் செய்கிறோம். இது போக லட்டு, ஜிலேபி, பால் கொழுக்கட்டை, கருப்பு கவுனி, சிவப்பு கவுனி அரிசி வைத்து இனிப்பு, இனிப்பு சீடை, இளநீர் பாயசம் செய்கிறோம். இவை அனைத்தும் எங்களின் சிக்னேச்சர் உணவுகள். உணவில் சுத்தமான மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துவதால், சுவையும் அபாரம், எளிதில் கெட்டும் போகாது. எல்லாவற்றையும் விட தரம் மற்றும் சுவைக்கு நாங்க என்றுமே காம்பிரமைஸ் செய்ததில்லை. ஒவ்வொரு டிஷ்ஷும் நாங்க பலமுறை செய்து பார்த்து அதன் பிறகுதான் அதனை எங்களின் கிச்சனில் கொண்டு வருவோம். இளநீர் பாயசம் மட்டுமே நாங்க 24 முறை முயற்சி செய்து அதன் சரியான பக்குவத்தை கொண்டு வந்தோம்.

பொதுவாக க்ளவுட் கிச்சன் என்றால், அவர்களை சுற்றி இருக்கும் இடங்களுக்கு மட்டும்தான் உணவினை ஆர்டர் எடுத்து டெலிவரி செய்வாங்க. நாங்க சென்னையின் அனைத்து ஏரியாவிற்கும் உணவினை வழங்கி வருகிறோம். சில உணவுகளை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து தருகிறோம். ஒரு சிலருக்கு ஒரு சில உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும். அவர்களுக்கு அதை தவிர்த்து வேறு உணவினை கொடுக்கிறோம். மேலும் பாப்பப் நிகழ்வுகளிலும் உணவு ஸ்டால் அமைக்கிறோம்.

எங்க உணவின் தரத்தின் மேலும் எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால் அதை மக்கள் சுவைக்க வேண்டும் என்பதற்காக எங்க உணவக ஸ்டாலில் பாட்டு பாடுவது, கவிதை, கதை சொல்வது போன்றவற்றை செய்வோம். இது போல் ஸ்டால்கள் அல்லது விழாக்களுக்கு சமைக்கும் போது உணவு மீந்துவிடும். அதனை வீணாக்காமல் அருகில் இருக்கும் காப்பகத்திற்கு கொடுத்திடுவோம்.

எங்க கிச்சனில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை. உணவினை சுவைத்து சரியாக உள்ளதான்னு என் தங்கை பார்ப்பாள். என் கணவர் டெலிவரி செய்வார். சீனியர் செஃப்பாக என்னோட பாட்டி… இப்படி எங்களுக்குள்ளே நாங்க வேலையினை பிரித்து செய்து கொள்கிறோம். இது க்ளவுட் கிச்சன் மட்டுமில்லை… க்ளவுட் முயற்சின்னுதான் சொல்லணும். எங்க அனைவரின் உழைப்பும் இதில் அடக்கம்’’ என்று புன்னகைத்தார் ப்ரீத்திமா.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post அப்பத்தாஸ் அடுப்படி! appeared first on Dinakaran.

Related Stories: