பூண்டி ஒன்றியத்தில் ரூ.28 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறப்பு

ஊத்துக்கோட்டை: போந்தவாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியத்தில் போந்தவாக்கம் கிராமம் உள்ளது. இங்கு தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள், மாணவ – மாணவிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் அதே பகுதியை சேர்ந்த 57 மாணவ – மாணவிகள் 5 வகுப்பறை கொண்ட கட்டிடத்தில் படித்து வந்தனர். அந்த கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டதால் கடந்த சில வருடத்திற்கு முன்பு அகற்றப்பட்டது. மேலும் இதனருகில் மற்றொரு கட்டத்தில் இட நெருக்கடியில் மாணவர்கள் படித்து வந்தனர்.

இந்நிலையில், புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், தொடக்கப்பள்ளி கட்டிடத்தை அகற்றி விட்டு ரூ.28 லட்சத்தில் புதிதாக பள்ளி கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது பூண்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபி கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பாபு, வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் கிராம பெரியவர்கள் அண்ணாமலை, முத்து, நாகரத்தினம், பழனி, மணிவண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

The post பூண்டி ஒன்றியத்தில் ரூ.28 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: