இந்த கூட்டத்தில் பல்வேறு நாடாளுமன்ற தொகுதிகளை சார்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்களது சிகருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தேர்தலில் அதிமுக பலமான கூட்டணி அமைக்காததால் தோல்வி அடைந்துள்ளதாக நிர்வாகிகள் குற்றம் சாட்டி பேசி வருகின்றனர். அதே நேரம் கூட்டத்தில் பங்கேற்ற பலரும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால், இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஏற்க மறுத்து வருகிறார். இதனால் விரக்தி அடைந்த அதிமுக நிர்வாகிகள், ஆலோசனை கூட்டத்தில் கருத்து தெரிவிக்காமல், பத்திரிகை மற்றும் ஊடகத்தில் தங்கள் கருத்துக்களை மறைமுகமாக தெரிவித்து வந்தனர். ஊடகங்களும் இதை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக செய்திகளை வெளியிட்டு வந்தது. இதனால், எடப்பாடி பழனிசாமி விரக்தி அடைந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சி, நீலகிரி, கோவை தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த மக்கள் இயக்கம் அதிமுக. இந்த கட்சி ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கக்கூடாது என ஆலோசனை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியால், கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர். செய்தி வெளியிடுவதற்கு முன் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது உண்மைக்கு மாறான செய்திகளை பரப்ப வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி விரக்தி appeared first on Dinakaran.