காவலர் குடியிருப்புக்கு விவசாய நிலம் கையகப்படுத்திய விவகாரம் தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் விசாரணை

வேளச்சேரி: பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சாரங்கன் (77). அதேபகுதியில் 6 ஏக்கர் விவசாய நிலம், கடந்த 3 தலைமுறைகளாக இவரது பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், விவசாய நிலம் அரசுக்கு சொந்தமானது என்றும், இந்த இடத்தில் காவல் குடியிருப்பு கட்டப் போவதாகவும் சாரங்கனுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சாரங்கன் மற்றும் குடும்பத்தினர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி பெரும்பாக்கம் போலீசார், அந்த நிலத்தில் இருந்தவர்களை வெளியேற்றி விவசாய நிலத்திற்கு செல்லும் வழியை இரும்பு தகடுகள் வைத்து அடைத்தனர்.

அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை போலீசார் சேதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், நீதிமன்ற அனுமதியுடன் பயிர் அறுவடை செய்தனர். தனது விவசாய நிலத்தை போலீசார் கைப்பற்றியது தொடர்பாக, சாரங்கன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் சாது ரவிவர்மன், அதிகாரிகள் நடராஜன், சுரேஷ் ஆகியோர் நேற்று விவசாய நிலம் தொடர்பாக பாதிக்கபட்ட நபர்களிடமும், சம்பவ இடத்திற்கு வந்திருந்த மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

The post காவலர் குடியிருப்புக்கு விவசாய நிலம் கையகப்படுத்திய விவகாரம் தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: