டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சிறப்பு மதிப்பெண்களால் டைப்ரைட்டிங் மாணவர் சேர்க்கை 10% அதிகரிப்பு: ஆகஸ்டில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள்

நெல்லை: அரசுப் பணியில் சேருவதற்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் தட்டச்சு பயிற்சிக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுவதால், தட்டச்சு படிக்கும் மாணவர்கள் சேர்க்கை 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக பயிற்சி நிறுவனத்தினர் தெரிவித்தனர். தமிழக அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளை நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு சான்றிதழ்களை வழங்குகிறது.

இதில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளை முடித்தவர்கள், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதும் போது, அவர்கள் இந்த தொழில்நுட்ப சான்றிதழ் பெற்றிருப்பதன் காரணமாக எளிதில் ‘கட்ஆப்’ மதிப்பெண்களை பெற்று அரசு வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இதனால் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தகுதியைப் பெறுவதற்காக மாணவர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்தில் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயில்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இதனால் வணிக பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்களை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். கொரோனா காலம் முடிந்த பின்னர், தட்டச்சு பயில்பவர்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்தது. தற்போது அரசு வேலைவாய்ப்பில் இந்த தகுதியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்ந்துள்ளதால், தட்டச்சு பயில்பவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த ஓராண்டில் தட்டச்சு பயில்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக பயிற்சி நிறுவனத்தினர் தெரிவித்தனர். இதற்கிடையே சுருக்கெழுத்து உயர் வேக தேர்வு ஆகஸ்ட் 10 மற்றும் 11ம்தேதி நடக்கிறது. சுருக்கெழுத்து இளநிலை, முதுநிலை தேர்வுகள் ஆகஸ்ட் 24, 25ம் தேதிகளில் நடக்கின்றன. வணிகவியல், அக்கவுன்டன்சி இளநிலை, முதுநிலை தேர்வுகள் ஆக.23ம் தேதி நடக்கிறது. இந்த தட்டச்சு இளநிலை, முதுநிலை, முதுநிலை உயர்வேகம் ஆகிய தேர்வுகள் ஆக.31 மற்றும் செப்.1ம் தேதி நடைபெற உள்ளன. தேர்வு முடிவுகளை அக்டோபர் 29ம்தேதி வெளியிட அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

The post டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சிறப்பு மதிப்பெண்களால் டைப்ரைட்டிங் மாணவர் சேர்க்கை 10% அதிகரிப்பு: ஆகஸ்டில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் appeared first on Dinakaran.

Related Stories: