2 நீதிபதிகள் புதிதாக பொறுப்பேற்பு.. முழு பலத்தை எட்டிய உச்சநீதிமன்றம் : சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமாரும் பதவியேற்பு!!

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக இருந்த மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கோடீஸ்வர் சிங்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். முன்னதாக நீதிபதிகள் ஆர்.மகாதேவன், கோடீஸ்வர் சிங் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து, அவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆணை பிறப்பித்தார்.

இதேபோல் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவையும் ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். இந்த நிலையில், இன்று, மகாதேவன், கோடிஸ்வர் சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த 2 பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. தலைமை நீதிபதியையும் சேர்த்து உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். அதே போன்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற நீதிபதியாக மகாதேவன் நியமனமானதை அடுத்து ஐகோர்ட் தலைமை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டார். ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் நியமிக்கப்படும் வரை கிருஷ்ணகுமார் பொறுப்பு வகிப்பார்.

The post 2 நீதிபதிகள் புதிதாக பொறுப்பேற்பு.. முழு பலத்தை எட்டிய உச்சநீதிமன்றம் : சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமாரும் பதவியேற்பு!! appeared first on Dinakaran.

Related Stories: