முருங்கை தந்த முன்னேற்றம்!

நன்றி குங்குமம் தோழி

‘விவசாயம் என்பது வியாபாரம் அல்ல… அது மனிதர்களின் வாழ்க்கை முறை’ என்பார் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். இதைப் பின்பற்றி தனது வாழ்வியலை இயற்கையோடு இணைந்து, இயற்கை கொடுத்த கொடை வரமான முருங்கை மரத்தின் மூலமாக பல்வேறு பொருட்களைத் தயாரித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த சுஜாதா. இவர் ‘மிராக்கில் ட்ரீ’ என்ற பெயரில் நிறுவனம் அமைத்து அதன் மூலம் இதனை விற்பனை செய்து வருகிறார். கடந்த ஆண்டின் தமிழக சிறப்பு விருதும் இவர் பெற்றுள்ளார்.

‘‘நான் பிறந்த ஊர் திருச்சி. நானும் என் கணவரும் சேர்ந்துதான் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம். எனக்கு தோட்டக்கலை மிகவும் பிடிக்கும். எங்களுக்கு தோட்டம் இருக்கிறது. இந்த நிறுவனம் ஆரம்பிக்கும் முன் அந்த தோட்டத்தில் பல வகையான காய்கறிகளை விளைவித்து அவற்றை சந்தையில் விற்பனை செய்து வருவோம்.

அதனாலேயே எனக்கு தோட்டக்கலை மேல் தனிப்பட்ட ஈர்ப்பு ஏற்பட்டது. காரணம், நாங்க விளைவிப்பது அனைத்தும் இயற்கை முறையில். ரசாயனம் கலப்பதில்லை என்பதால் அனைத்து காய்கறிகளிலும் அதன் சத்து குறையாமல் மக்களுக்குக் கொடுக்கிறோம் என்பதில் முழு திருப்தி இருந்தது. அதுதான் எங்களுக்கு இதையே ஒரு தொழிலாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற
ஆர்வத்தினை ஏற்படுத்தியது. எங்க நிறுவனம் துவங்கவும் அதுதான் காரணம்’’ என்றவர், முருங்கை சார்ந்த பொருட்கள் தயாரித்தது குறித்து விவரித்தார்.

‘‘முருங்கை மரம் ஒரு அதிசய மரம். சிலர் இந்த மரம் சாதாரணமாக விளைவதாலும், அதன் காய் மற்றும் கீரை கிடைப்பதால், அதற்கு பெரிய அளவில் மதிப்பு ெகாடுப்பதில்லை. ஆனால் இது ஒரு மிராக்கிள் மரம். இதில் உள்ள காய், கீரை, மரப்பட்டை அனைத்திலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒமேகா-6, ஒமேகா-9 இவை மீனில் மட்டும்தான் உள்ளது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இந்த சத்துக்கள் அனைத்தும் முருங்கையிலும் உள்ளது. மேலும் ஜிங்க், இரும்புச்சத்து இதில் நிறைந்துள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடக்கூடியது முருங்கை கீரை. அதனால்தான் இதனைக் கொண்டு தொழில் துவங்கலாம்னு முடிவு செய்தோம்.

பொதுவாக இதனை அப்படியே காய் மற்றும் கீரையாகத்தான் நாம் சாப்பிட்டு வருகிறோம். அப்படி இல்லாமல், இதனை புதிய விதத்தில் வழங்க முடிவு செய்து, முதலில் பவுடராகவும், பிறகு பந்து போன்ற வடிவத்தில் அமைத்து பசியின்மை நீக்கக்கூடிய பொருளாகவும் மாற்றி விற்பனைக்குக் கொண்டு வந்தோம். இது மக்கள் மத்தியில் அமோக ஆதரவைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து முருங்கைக்காயை பதப்படுத்தி முருங்கை எண்ணெய் தயாரித்தோம். கண்களின் நரம்புகளுக்கும், தீ காயங்களுக்கும், கை, கால் வலிகளுக்கும் இந்த எண்ணெய் சிறந்த வலி நிவாரணியாகவும், நோய் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வையும் தந்தது. முருங்கைக்கீரையில் அழகு சார்ந்த பொருட்களும் தயாரித்து வருகிறோம். முருங்கை பிசினை தினமும் இரவு நேரம் பாலில் கலந்து பருகி வந்தால் உடல் வலிமையாகும். முருங்கைக்கீரையில் டீ, சாக்லெட், எனர்ஜி பானம், ஸ்நாக்ஸ், மீன் மாத்திரை என 50க்கும் மேற்பட்ட பொருட்களை முருங்கையால் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்’’ என்றவர் கீரையை பதப்படுத்துதல் முதல் அதன் தயாரிப்பு குறித்து விவரித்தார்.

‘‘முருங்கைக் கீரையை வெயிலில் காய வைக்கக்கூடாது. காரணம், அதிக வெயில் பட்டால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் சீக்கிரம் ஆவியாகிவிடும். அதனால் நாங்க Heat Pump மற்றும் Ultra Low Temperature டிரையர் கொண்டு இந்தக் கீரையை காய வைக்கிறோம். இலையை குறைவான வெப்பத்தில் காய வைக்கும் போது சத்துக்களை இழக்காமல் மீட்க முடியும். அதனால் இலையின் நிறம் மாறாமல் அதே சமயம் நன்கு காய்ந்த நிலையில் இருக்கும்.

இந்தக் கீரையில் கூட்டு, பொரியல் எல்லாம் செய்யலாம். கீரையை சுடு தண்ணீரில் ஐந்து நிமிடம் போட்டு வைத்தால் கீரை அப்போது பறித்த கீரை போல் மாறிடும். அதன் பிறகு பருப்புடன் சேர்த்து கூட்டு வைக்கலாம். பொரியலும் செய்யலாம். டிரையர் கொண்டு காய வைப்பதால், கீரையில் உள்ள தண்ணீர் தன்மை, சத்துக்கள் மற்றும் அதன் மணம் மாறாமல் அப்படியே கிடைக்கும்.

இந்த தொழில் ஆரம்பித்த போது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்பதில் நான் குறிக்கோளாக இருந்தேன். அதனால் முதலில் வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே ஆரோக்கியமாகவும், சுவையாகவும் செய்ய ஆரம்பித்தோம். முருங்கைக்கீரையில் இருக்கும் ஸ்லைருலீனாவை கடைவது சாதாரண விஷயம் கிடையாது. அவற்றை நுகர்ந்து பார்க்க முடியாது.

அதைக் கொண்டு சுவையாகவும், ஆரோக்கியம் குறையாமல், அனைவரும் சாப்பிடக்கூடிய உணவாக கொடுக்க வேண்டும் என்பதில் பல ஆய்வுகளை மேற்கொண்டோம். இதற்கான சிறப்பு பயிற்சிகள் எடுத்தோம். அதன் பிறகு முதன் முதலில் 2017ம் ஆண்டு நடைபெற்ற விவசாயக் கண்காட்சியில் எங்க பொருளை அறிமுகப்படுத்தினோம். அனைத்து பொருட்களும் விற்பனையானது. கண்காட்சிக்கு வந்த பலர் மீண்டும் எங்களை அணுகி பொருட்களை ஆர்டர் செய்தார்கள்.

கீரையில் பொடிகளை தயாரிக்கும் போது நிறைய டன் கீரைகள் தேவைப்படும். எங்க தோட்டத்தில் விளையும் கீரை மட்டுமே பத்தாது என்பதால், மற்ற விவசாயிகளிடம் இருந்தும் முருங்கைக் கீரையை வாங்கினோம். இப்படியாக ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு அதற்கான தீர்வையும் நாங்களே கண்டறிந்தோம்’’ என்றவர் இதில் உள்ள நன்மைகள் குறித்தும் விளக்கினார்.

‘‘முருங்கைக் கீரை மற்றும் பூவை காயவைத்து தேனில் கலந்து சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் PCOD பிரச்னை, குழந்தையின்மை மற்றும் கர்ப்பப்பை பிரச்னை போன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். முருங்கை பூவை பொடியாகவும், மாத்திரை வடிவிலும் கொடுக்கிறோம். வெளிநாட்டில் குறிப்பாக பாரீசில் வசிக்கும் தமிழர்களுக்கு முருங்கைக்காய்கள் அங்கு கிடைப்பதில்லை. அதனால் நாங்க கீரை மற்றும் காய்களை டிரையரில் போட்டு காயவைத்து பேக்கிங் செய்து கொடுக்கிறோம். அதை அவர்கள் சாம்பார் மற்றும் பொரியலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முருங்கைக்காய் இரண்டு வருடம் வரை கெடாமல் இருக்கும். மேலும் அப்பொழுது பறித்த காய் போல் புதிதாகவும், சுவை மாறாமலும் இருக்கும்.

முருங்கை மட்டுமில்லை கத்திரிக்காய், கேரட், புதினா, கறிவேப்பிலை போன்றவைகளும் அந்த ஊரில் விலை அதிகம். நிறைய உணவு தொழிலகங்களில் சட்னி அரைக்க, சாம்பாரில் தூவுவதற்காக மல்லி இலை, முருங்கைக் கீரையை கேட்கிறார்கள். அவர்களுக்கு டிரையரில் காய வைத்து பேக்கிங் செய்து கொடுப்போம். இவ்வாறு செய்வதால் பொருட்களும் கெடாது, புதிதாக இருக்கும். நாங்க பெரும்பாலும் முருங்கை இலை, கறிவேப்பிலை, மல்லி இலை எல்லாம் எங்க தோட்டத்தில் பயிர் செய்திடுவோம். அலங்காநல்லூரில் 10 ஏக்கர் நிலத்தில் முழுதும் விவசாயம்தான் செய்கிறோம். எங்கள் தோட்டத்தில் முருங்கைதான் பெரும்பாலும் விளைவிக்கிறோம். கிட்டத்தட்ட ஆயிரம் மரம் இருக்கும். இத்துடன் பனை, தென்னை மரம், காய்கறிகளும் போட்டு இருக்கிறோம்.

தற்பொழுது முருங்கையில் செய்தது போல பனையிலும் செய்ய ஆரம்பித்து இருக்கிறோம். சுண்ணாம்பு கலக்காமல் பதனீரை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பொதுவாக நாம் ஒரு தொழிலில் ஈடுபடும் போது அந்த வெற்றிக்கு துணையாக ஒரு சிலர் உடன் இருப்பார்கள். என்னுடைய இந்த வெற்றிக்கு பக்க பலமாக இருப்பது என் கணவர்தான். அவர்தான் நான் துவண்டு விழும் காலத்தில் என்னை வழிநடத்தி எனக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.

அடுத்து என்னுடன் பணிபுரியும் பணியாளர்கள். அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தான் வெற்றியை கொடுத்திருக்கிறது. எங்க நிறுவனத்தில் பெரும்பாலும் பெண்கள் வேலை பார்க்கிறார்கள். எங்களின் முக்கிய நோக்கம் நாமும் நலமாக இருக்க வேண்டும். மக்களும் நலமாகவும் வளமாகவும் வாழ வேண்டும் என்பதுதான்’’ என்ற சுஜாதா சிறந்த விவசாய கண்டுபிடிப்பு, சிறந்த தொழிலதிபர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

தொகுப்பு: விஜயா கண்ணன்

The post முருங்கை தந்த முன்னேற்றம்! appeared first on Dinakaran.

Related Stories: