அன்னையின் அருள் பொழியும் ஆடி மாதத்தின் பெருமை!!

இதுவரை, கல்விக்கு அதிபதியும், ஜோதிடக் கலையில் வித்யாகாரகர் என்றும், ஔஷத காரகர் என்றும் போற்றிப் பூஜிக்கப்படும், புதனின் ராசியான மிதுனத்தில் சஞ்சரித்துவந்த சூரியபகவான், சந்திரனின் வீடான கடகத்திற்கு மாறுவதையே ஆடி மாதம் என ஜோதிடக்கலை போற்றிப் புகழ்கிறது.இம்மாதத்தில், அம்பிகை, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிமார்களையும் பூஜிப்பது விசேஷ நன்மைகளை நமக்கு அளிக்க வல்லது. குறிப்பாக, அம்மனை இந்த ஆடி மாதத்தில் பூஜிக்கும் வழக்கம் காலங்காலமாக தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதிலும், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் சந்நதிகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்! மேலும், ஈரேழு பதினான்கு உலகிற்கும் அன்னையான அம்பிகை ஆதிபராசக்தியே விரதமிருக்கும் மாதமும் இந்த ஆடி மாதமேயாகும்! ஒவ்வொரு ஆண்டும் சங்கரன் கோயிலில் அம்பிகை கோமதி அம்மன், இறைவனைக் குறித்து தவமிருக்கும் “தபசு”க்காட்சி உலகப்பிரசித்திப்பெற்றது. மேலும், திருமாலிருஞ்ேசாலை கள்ளழகர் ராஜ சேவை, வடமதுரை சௌந்தரராஜப் பெருமான், கருடவாகன உற்சவம், சமயபுரம் மாரியம்மன், நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கண்ணாடிப் பல்லக்கில் பவனிவரும் அற்புதக் காட்சி ஆகியவை ஆடி மாதத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன. திருக்கோயில்களில் அம்பிகையின் விசேஷ அலங்கார தரிசனமும் பூஜைகளும் பிரசித்திப்பெற்றவையாகும். இனி, இந்த ஆடிமாதத்தில் வரும் முக்கிய புனித நன்நாட்களைப் பார்ப்போம்.

ஆடி 1(17.7.2024) : ஆடிப்பண்டிகை. ஆஷாட ஏகாதசி. ஸர்வ நதி ரஜஸ்வலை. இன்றிலிருந்து மூன்று நாட்கள் நதி தேவியர், விரதமிருப்பதால், இக்காலகட்டங்களில் நதிதீரங்களில் ஸ்நானம் செய்யக் கூடாது.

ஆடி 4 (20-7-2024) புதன், வக்கிர தசை ஆரம்பம்.
ஆடி 16 (1-8-2024) சுக்கிரன், சிம்ம ராசிக்கு மாறுதல்.
ஆடி 28 (13-8-2024) புதன், வக்கிர தசை நிவர்த்தி.

ஆடி 4 (20.7.2024): கோகிலா விரதம். ஒருவர், தம் முற்பிறவியில் சிவ பெருமானுக்கு, நல்ல பரிசுத்தமான தேனைக் கொண்டு அபிஷேக – ஆராதனை செய்தால் மட்டுமே மறுபிறவியில் நல்ல சரீரத்துடன் கூடிய சாரீரமும் (குரல் வளமும்) கிட்டும் என்பது புராதன நூல்களில் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இப்பிறவியிலேயே நல்ல தேனினும் இனிய – கருங்குயிலின் குரல் வளத்துடனும், அதன் மூலம் பெறற்கரிய புகழும், குறைவிலாச் செல்வ வளத்துடன் வாழ்ந்திட இவ்விரதத்தைக் கடைப்பிடித்தல் மிக, மிக அவசியம். மேலும், இன்று பௌர்ணமி. சத்ய நாராயண பூஜை சகல சம்பத்துக்களையும், நற்பலன்களையும் தரக்கூடியது.
ஆடி 5 (21.7.2024): குரு பூர்ணிமா. வியாச பூஜை. பாரதப் புண்ணிய பூமி மக்களின் குருவெனப் பூஜிக்கப்படுபவரும், வேதங்களை நான்காக வகுத்தளித்தவருமான வியாசபகவானையும், நமக்குக் கல்வி எனும் அழிவற்ற செல்வத்தை அளித்தருளிய பெரியோர்களையும் பூஜிக்கும் தினம் இந்த குருபூர்ணிமா. அன்றைய தினம் வியாசபகவானையும், நமக்கு கல்விச் செல்வத்தை அளிக்கும் ஆச்சார்யர்களையும் வணங்கி, பூஜிக்கும் தினமாகும். அன்று விரதமிருந்து, நமக்குக் கல்வி எனும் செல்வத்தை அளித்துவரும் ஆசிரிய பெருமக்களை வணங்கி, அவர்களது ஆசி பெறும் புண்ணிய தினமாகும். இன்று, குருமார்களுக்கு, ஆடைகள் அளித்தும், பாதபூஜைசெய்வதும் உத்தமம்.
ஆடி 12 (28.7.2024): நீலகண்டாஷ்டமி இந்நன்னாளில் காலைக் கடன்களை முடித்தபின்னர், நீராடி, சிவபெருமானை தரிசிக்க வேண்டும். மாலை நேர சூரிய அஸ்தமத்தின்போது, பைரவரையும் பக்தி சிரத்தையுடன் வணங்கி வழிபட்டால், குழந்தைச் செல்வங்கள், கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர். அதன் மூலம் பல துறைகளிலும் வியக்கவொண்ணா சாதனைகளைப் படைப்பர்.
ஆடி 13 (29.7.2024): ஆடிக்கிருத்திகை. இன்றைய தினம் முருகப் பெருமானை வழிபடுவதால், ஞானமும், எதிரிகள் ஏதுமில்லா நல்வாழ்வு வாழ்வர்.
ஆடி 14 (30.7.2024): “செத்தவர் தம்மை எழுப்பித் தருகின்ற சித்தர் பிறந்த தமிழ்நாடு…!” மகாகவிபாரதி.
மனித சக்திக்கு அப்பாற்பட்ட இறை சக்தியை ஒருங்கே பெற்றவரும், பதினெட்டு சித்தர்களில், சிவபெருமான் பார்வதி தேவியின் அருட் கடாட்சத்தைத் தன் தாயின் கருப்பையிலே கண்ட சித்த மகா புருஷர் மச்சமுனி சித்தர். ஒரு சமயம், கோடியக்கரையில், லோக மாதாவாகிய அன்னை பார்வதி, காலச் சக்கரத்தைப் பற்றி அறிய விரும்புவதாகச் சொல்ல, சிவபெருமானும் எடுத்துரைக்கலானார். அனைத்து விஷயங்களையும், கேட்டுக்கொண்டிருந்த அன்னை பார்வதி தேவி, சில மணித் துளிகளிலேயே கண்ணயர்ந்தாள்! அந்த கிடைத்தற்கரிய அபூர்வ விஷயங்களைக் கேட்டுக்கொண்டிருந்த கருவுற்றிருந்த மீன் ஒன்றிற்கு மீதமுள்ள ரகசியங்களையும் போதித்துப் புதிதாகப் பிறப்பிக்கச் செய்து, மச்சமுனி என நாமகரணமும் சூட்டி, முருகப் பெருமானின் திருவடித் தாமரைகளில் என்ெறன்றும் வண்ணமிகு வாசமிகு மலராய் வீற்றிருந்து அருள்பாலிப்பாய் எனவும் செவ்வரம் தந்தருளினார், சிவபெருமான்! அட்ட மகா சித்துக்களையும் கைவரப்பெற்ற மச்சமுனி, அந்தச்சித்து விளையாட்டுக்களை சுயநலனிற்குப் பயன்படுத்தாமல், ஏதுமற்ற ஏழை எளியோர்க்கும், வறியோர்க்கு அன்னதானமாகவும், பொருட்களாகவும் கொடுத்து, உதவினார். ஆடி மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் ஜீவசமாதி அடைந்துள்ள இம்மகான், இன்றளவும் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள சுனையில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்காக மீனுருவில் காட்சியளித்து, அருள்பாலிக்கின்றார். அம்மகானுக்கு மிகவும் பிடித்த நாட்டு மாட்டுப் பசுந்தயிர், அதை அச்சுனையிலிட்டு சில மணி நேரம் அம்மகானை,மனமுருகத் தியானித்தால், பல்லாயிரக்கணக்கான மீன்களில் தனித்துவமான, பளிங்கைப் போன்ற வெண் நிற மீன் வடிவில் தரிசனம் தந்துவிட்டு மறைவதைக் காணலாம், இன்றும்! மகப்பேரின்மை, திருமணத் தடைகளை விலக்கி, நம் அபிலாஷைகள் அனைத்தையும் நிறைவேற்றித்தரும் இம்மகானை அனைவரும் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டியது அவசியம். போகும்போது வாழைப் பழங்களையும் கொண்டு செல்ல மறக்கவேண்டாம். நெடுநாளாக நம்முடன் பழகிய நண்பனைப்போல், குரங்குகள் நம் அருகே வந்து பழங்களைப் பெற்றுச் செல்கின்றன, வாஞ்சையுடன்!! இங்கு காசி விஸ்வதாதப் பெருமானை தரிசித்துவிட்டுச் சென்றாலே நல்ல அதிர்வலைகளை (vibration) நம்மால் உணரமுடிகிறது.
ஆடி 16 (1-8-2024) : பிரதோஷம். மாலையில் நந்தியெம்பெருமானை பூஜிப்பது சகல பாபங்களையும் போக்க வல்லது.
ஆடி 18 (3.8.2024) : ஆடிப் பெருக்கு புண்ணிய நதி காவிரியைப் பூஜிக்கும் நன்னாள்.
ஆடி 19 (4.8.2024) : ஆடி அமாவாசை மகத்தான புண்ணிய தினத்தில், புண்ணிய நதிகளிலும், புஷ்கரணிகளிலும், கடலிலும் புனித நீராடி, நம்மைப் பெற்று வளர்த்து, சீராட்டிப் பாராட்டி, வளர்த்த, மறைந்த நம் முன்னோர்களுக்கு, திதி பூஜையளித்து, பூஜிக்கவேண்டிய மகத்தான புண்ணிய தினமாகும். குலம் வளரும். குடும்பம் செழிக்கும்.
ஆடி 22 (7.8.2024) : ஸ்வர்ண லட்சுமியின் அருட்பார்வை உங்கள் மீது படவும், தம்பதியர் இருவரும் (கணவர் – மனைவி) ஒருமித்த கருத்துடனும், அந்நியோன்யத்துடனும், நோய் நொடிகள் அணுகாவண்ணமும், தீர்க்க சுமங்கலியாக வலம் வரவும் ஸ்வர்ண கௌரி விரதம் அனுஷ்டித்தால், சகல செளபாக்கியங்களுடனும், மனமகிழ்ச்சியுடனும், இல்லற தர்மத்தை கடமையை இனிதே நிறைவேற்றுவீர்கள்! திரு ஆடிப் பூரம். திருவாடிப் பூரத்தில் ஜெகத்துதித்த, சூடிக்கொடுத்த ஆண்டாள் அவதார தினம். இன்று ஆண்டாளையும் ரங்க மன்னாரையும் பூஜிப்பது மகத்தான புண்ணியத்தைத் தரும். ஆண்டாளின் திருப்பாவையை பக்தி சிரத்தையுடன் படித்தால், மணமாகாத கன்னியருக்கு, தங்கள் மனத்திற்குகந்த நல்ல மணாளன் அமைவது திண்ணம்.

ஆடி 24 (9.8.2024) : கருட பஞ்சமி மற்றும் நாக பஞ்சமி. பகவான் நாராயணனின் வாகனமாகிய கருட பகவானையும், நாகங்களையும் பூஜிக்கவேண்டிய மகத்தான புண்ணிய தினம். திருக்கோயில்களில் நாகபூஜையும், கருடபுராணம் படித்தலும், நெய்தீபம் ஏற்றி வணங்குவதும் சாலச்சிறந்தது. மேலும், இன்றைய தினம் பணி கௌரி விரதம். இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு, கணவர் – மனைவியரின் பெயரிலேயே தொழில் அமைந்திடவும் அந்தத் தொழில் மேன்மேலும் சிறந்த அபிவிருத்தியடைந்திடவும், அதன்மூலம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் நன்மை பல புரிந்திட வைக்கும். நெடுநாட்களாக நோய்வாய்ப்பட்டு, படுத்தபடுக்கையாக இருப்பவர்கள்கூட (அவர்களை உத்தேசித்து இவ்விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்) அந்நோய்களிலிருந்து விடுபட்டு, அவஸ்தையிலிருந்தும் உபாதை களிலிருந்தும் விடுபட்டு, உடல் வலி கணிசமாகக் குறைவதைக் கண்கூடாகக் காணலாம்.

ஆடி 26 (11.8.2024): சுந்தர மூர்த்தி நாயனார் குருபூஜை.

ஆடி 27 (12.8.2024) : ஸ்வாதி நட்சத்திரத்தில் அவதரித்த குதம்பைச் சித்தரின் அவதாரப் புண்ணிய தினம். யாதவ குலத்தில் அவதரித்த இம்மகான், தலையில் சுருட்டை முடியுடனும், தாமரை மலரை மொய்க்கும் கருவண்டென நேத்திரங்களும், வில்லையொத்த புருவங்களும், வட்டமுகமும், மாம்பழக் கன்னங்களும், கொவ்வைச் செவ்வாயும், வாரியணைத்து முத்தமிடத்தூண்டும் இவரது அழகிய திருமேனியைக் கண்ட அவர்தம் தாய், பெண்களுக்குரிய ஆடை – குதம்பை எனும் காதணி ஆபரணங்களைத் தரித்து அழகுபார்த்தாள். (தற்காலத்திலும், சின்னஞ்சிறு பிரயாத்தில், ஆண் குழந்தைகளுக்கு பாவாடை சட்டை போட்டுப் பார்த்து மகிழ்வதுண்டு!) அதுவே குதம்பைச் சித்தர் எனும் காரணப்பெயராகிற்று! தத்துவப் பாடல்களில் நிரம்பிவழியும் இவரது பாடல்களில், “சாதியொன்றில்லை; சமயமொன்றில்லை என்று ஓதி உணர்ந்தறிவாய் – குதம்பாய், ஓதி உணர்ந்தறிவாய்”என்றும், “வெண் காயம் உண்டு. மிளகுண்டு, சுக்குண்டு. உன் காயம் ஏதுக்கடி? குதம்பாய் உன் காயம் ஏதுக்கடி”, “நித்திரை கெட்டு, நினைவோடு இருப்பார்க்கு முத்திரை ஏதுக்கடி – குதம்பாய் முத்திரை ஏதுக்கடி?” ஆழ்மனதில் இறைவனைக் காணும் வரையில்தான் பூஜையும், புனஸ்காரங்களும்!! அப்பரம்பொருளை உணர்ந்துவிட்டாலோ, எல்லையற்ற பேரின்ப நிலையே மிஞ்சும்! மாயவரத்தில் ஜீவ சமாதி எய்தினார்.

ஆடி 28 (13.8.2024): சீதளா விரதம். முனி சிரேஷ்டராகிய காத்யாயனரின் மகளாகவும், முறத்தையும், துடைப்பத்தையும், மற்றொருஹஸ்தத்தில் அமிர்த கலசத்துடனும், துர்கா தேவியின் அம்சமாகவும் அவதரித்த சீதளா தேவி, உடலில் உஷ்ணத்தினால் உண்டாகும் நோய்களையும் (அதாவது உடலிலும் உடல் உள் – வெளி உறுப்புகளிலும் கட்டி, புண்கள்), பிறர் நம்மீது கொண்டுள்ள அசூயையினால் (பொறாமை மற்றும் வெறுப்பு) ஏவப்பட்ட பில்லி-சூன்னியங்களையும் போக்கடிக்கும் சக்தி பெற்ற சீதளா தேவி, உடல் – மனநோய்களைப் போக்குபவளாகவும், நம் சந்ததியினரின் அகால மரணத்தைக் களைபவளாகவும், நீண்ட ஆயுள் – ஆரோக்கியத்துடன், மனநிறைவுடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு வழிவகை ெசய்கிறாள், இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம்! இவ்விரதத்தை சீதளா அஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது.

ஆடி 31 (16.8.2024): வரலட்சுமி விரதம். அனைத்து அபிலாஷைகளையும் நிறைவேற்றும் இப்பூஜையை, சுமங்கலிப் பெண்கள் அனைவரும் செய்துவந்தால், உங்கள் வீட்டில் சகல சௌபாக்கியங்களையும் பெற்று, நன்மக்கட்பேறு முதற்கொண்டு, முக்கியமாக, மணமான பெண்கள் நித்திய சுமங்கலிகளாகவும், தொட்ட இடம் துலங்க வரும் நங்கையராகவும் பரிமளிப்பர். இன்று மஹாலட்சுமி பூஜை மற்றும் துளசி பூஜை செய்வதால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் உங்களை வந்தடையும்.சுமங்கலிகளுக்கு அன்னம் அளித்து, தாம்பூலம், புடவை அல்லது ரவிக்கை துண்டு கொடுத்து வணங்க வேண்டும். இந்நன்னாளில் கும்ப லக்னத்தில், இவ்விரதமானது மாலை 6.18-லிருந்து இரவு 7.58க்குள் முடிக்க வேண்டியது.மேற்கூறிய காரணங்களினால்தான், ஆடி மாதத்தை அம்பிகையின் மாதம் என்றும், அம்மனின் மாதம் என்றும் போற்றிப் பூஜிக்கிேறாம். நாம் அறிந்தோ அறியாமலோ செய்துள்ள அனைத்து பாபங்களும் விலகும்.

பகவத் கைங்கர்ய,
ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி
A.M.ராஜகோபாலன்

The post அன்னையின் அருள் பொழியும் ஆடி மாதத்தின் பெருமை!! appeared first on Dinakaran.

Related Stories: