மழைக்கால கூட்டத்தொடரையொட்டி வரும் 21ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு: திரிணாமுல் காங். புறக்கணிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் வரும் 23ம் தேதி நடப்பாண்டிற்கான முழு பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இக்கூட்டத்தொடரையொட்டி, வரும் 21ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்டி உள்ளது. இக்கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரானதன் மூலம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என அக்கட்சி தரப்பில் அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற கட்சித் தலைவரான மாநிலங்களவை எம்பி டெரெக் ஓ பிரையன், அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘‘வரும் 21ம் தேதி மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட உள்ளது. 1998ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய பிறகும் இந்த தினத்தை மம்தா தொடர்ந்து அனுசரிந்து வருகிறார். எனவே அன்றைய தினத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடப்பதால் எங்கள் கட்சி சார்பில் யாரும் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

The post மழைக்கால கூட்டத்தொடரையொட்டி வரும் 21ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு: திரிணாமுல் காங். புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: