மகளிர் குழுவால் சிறு தொழில் செய்யும் கிராமத்துப் பெண்கள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘இந்தப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தது கிடையாது. வெளியுலகம் தெரியாது. இப்போது சொந்தமாக சிறு தொழில் செய்றாங்க. சமூக சேவையில் ஈடுபடுறாங்க’’ என்கிறார் எஸ்.எஸ்.டி அமைப்பின் கள இயக்குனரான சரவணன். இவர் அமைப்பு மூலமாக பெண்களுக்கான மகளிர் குழுவினை அமைத்து அதன் மூலம் அவர்களுக்கு ஒரு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ‘‘ஒவ்வொரு ஏரியாவிலும் அங்குள்ள பெண்கள் இணைந்து மகளிர் குழு அமைத்து நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் அவர்களால் தங்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் நாங்க மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் ஸ்ரீசாய் என்ற பெயரில் ஒரு மகளிர் குழு அமைத்தோம்.

எங்க அமைப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலத்திட்டத்திற்காக இயங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சீர்காழியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அதில் பல இளம் பெண்கள் கலந்து கொண்டார்கள். அவர்களை சந்தித்த போது இல்லத்தரசிகளாக இருக்கும் அவர்களுக்கு ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததை அறிந்தோம்.

ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாமிற்கு வந்திருந்த இரண்டு பெண்களிடம் மகளிர் குழு ஒன்றை அமைப்பது குறித்து பேசினோம். முதலில் தயங்கியவர்கள், இதனால் ஏற்படும் நன்மை குறித்து விவரித்ததும் சிந்திக்க தொடங்கினார்கள். அவர்களின் அந்த சிந்தனைதான் இப்போது அவர்களுக்கென ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது’’ என்றவரை தொடர்ந்தார் மகளிர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான வினோலியா.

‘‘என் கணவர் கார்பென்டர் வேலை பார்க்கிறார். திருமணமாகிதான் நான் இந்த ஊருக்கு வந்தேன். எனக்குள் எப்போதும் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருக்கும். அப்பதான் எஸ்.எஸ்.டி அமைப்பினர் மகளிர் குழு அமைப்பது குறித்து பேசினாங்க. ஒரு குழு அமைப்பதால், எங்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி அவங்க சொன்னாங்க. இதனால் என்னால் முடிந்த உதவியை என் குடும்பத்திற்கு செய்யலாம்னு தோணுச்சு.

அதுவரை பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் பேசாத நான் அவர்களை சந்தித்து இது குறித்து பேசினேன். அப்படி 12 பேராக இணைந்தோம். குழுவினை எவ்வாறு அமைக்க வேண்டும். அதில் கணக்கு வழக்குகளை எப்படி எழுதணும். கடன் பெறுவது, அதனை எத்தனை தவணையில் திருப்பி செலுத்தணும். குழுவில் ஒரு தொகையை எவ்வாறு சேமிக்கணும் என்று பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தாங்க. இப்ேபாது நாங்க வெளியே யாரிடமும் கடன் வாங்குவதில்லை. மேலும் எங்களின் கணவரின் தொழிலுக்கும் உதவியாக இருக்கிறோம்.

சிலர் தனியாகவும் தொழில் செய்றாங்க’’ என்றார்.‘‘நாங்க பெரும்பாலும் எந்த வேலைக் கும் போனதில்லை. கணவர் கொண்டு வரும் சம்பாத்தியத்தில்தான் குடும்பத்தை நடத்தி வந்தோம். சில சமயம் வீட்டுத் தேவைக்காக அதிக வட்டிக்கு கடன் வாங்குவோம். ஆனால் அதை திருப்பி தரவே ரொம்ப சிரமப்படுவோம். இப்போது நாங்க வெளி கடன் வாங்குவதை நிறுத்திட்டோம்’’ என்றார் மற்றுமொறு உறுப்பினரான சிவரஞ்சனி.

‘‘என் கணவர் கேபிள் ஆபரேட்டரா இருக்கார். நான் இந்தக் குழுவில் இணைந்த பிறகு இப்போது அவருடன் சேர்ந்து அவரின் தொழிலுக்கு உதவியா இருக்கேன். எங்க குழுவில் உள்ள பல பெண்கள் சொந்தமா தொழிலும் செய்கிறார்கள். டிபன் கடை, தையல் வேலை, கீத்து கட்டுவது, பால் வியாபாரம்னு செய்றாங்க. முதலில் குழு அமைத்தோம். அதன் பிறகு வங்கியில் கடன் வாங்கி அதன் மூலம் எல்லோரும் ஒவ்வொரு தொழில் துவங்கினோம். வருமானத்தில் வரும் ஒரு தொகையை நாங்க குழுவில் சேமிப்பிற்காக போடுவோம். ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்த பிறகு அதை நாங்க எங்களுக்குள் உள் கடனா பெற்றுக் கொள்வோம்.

அதனை குறிப்பிட்ட மாதத்தில் வட்டியுடன் திருப்பி குழுவில் கட்டிடுவோம். இப்படித்தான் குழுவின் சேமிப்பும் அதிகரித்தது. ஆரம்பத்தில் ரூ.100 மட்டுமே குழுவின் சேமிப்பாக செலுத்தி வந்தோம். தற்போது ரூ.500 செலுத்தி வருகிறோம். எங்களின் தேவைகள் மட்டுமில்லாமல் எங்க ஊர் பள்ளி குழந்தைகளுக்கான சின்னச் சின்ன தேவைகள் மற்றும் எங்க ஊரின் வளர்ச்சிக்காகவும் நாங்க பல சேவைகளை செய்து வருகிறோம். எங்களைப் பார்த்து எங்க ஊரில் தற்போது இரண்டு குழு அமைத்திருக்காங்க. அவங்களுக்கு இதனை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று நாங்க பயிற்சி அளித்து வருகிறோம். மேலும் நாங்க குழுவாக இணைந்து மாடு மற்றும் ஆடுகளுக்கான தீவனம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் எண்ணம் உள்ளது’’ என்றார் சிவரஞ்சனி.

மேகலா, கிராம வளர்ச்சி அலுவலர்‘‘நான் பத்து வருஷமா இந்த வேலையில் இருக்கிறேன். 2015ல்தான் எங்க பஞ்சாயத்து மூலமாக மகளிர் குழுவினை அமைத்தோம். ஏற்கனவே இயங்கிய குழு தற்போது நடைமுறையில் இல்லை. அந்த சமயத்தில்தான் எஸ்.எஸ்.டி அமைப்பு ஊட்டச்சத்து முகாம் அமைத்தாங்க. அவர்களிடம் மகளிர் குழு அமைக்கும் திட்டம் பற்றி கூறியதும், அதனை அமைக்க அனைத்து உதவியும் செய்ய முன்வந்தாங்க.

இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொரு பெண்களும் சொந்தமாகவோ அல்லது தன் கணவர் செய்யும் தொழிலுக்கு உதவி செய்தோ வராங்க. அதுமட்டுமில்லாமல் ஊர் மற்றும் பள்ளிக்கூட வளர்ச்சிக்கு தங்களால் முடிந்த சேவையினை செய்கிறார்கள். அதில் பள்ளிக்குழந்தைகள் தண்ணீர் குடிப்பதற்காக இரண்டு எவர்சில்வர் தண்ணீர் டிரம் வாங்கிக் கொடுத்திருக்காங்க. மேலும் தெருவில் உள்ள தண்ணீர் குழாய் உடைந்த போன போது, அதை சீரமைத்துக் கொடுத்தார்கள். பள்ளிக் குழுந்தைகளுக்காக ஊட்டச்சத்து குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வராங்க. இவர்களின் ஆர்வத்தைப் பார்த்து நாங்க வேதாரண்யத்தில் உள்ள தீவினம் தயாரிப்பு தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்று அதற்கான பயிற்சி அளித்தோம். தற்போது இவர்கள் குழு சார்பாக இதனையே ஒரு தொழிலாக அமைக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான வேலையில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.’’

தொகுப்பு: நிஷா

The post மகளிர் குழுவால் சிறு தொழில் செய்யும் கிராமத்துப் பெண்கள்! appeared first on Dinakaran.

Related Stories: