மூலிகை, பழம், பூ கம்புசா…

நன்றி குங்குமம் தோழி

சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன் படிச்சேன். பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு கம்ப்யூட்டரில் பொறியியல் படிக்க அமெரிக்கா சென்றேன். என் குடும்பத்தில் ஏற்பட்ட சில அசம்பாவித சம்பவங்களால் சென்னைக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இங்கு வந்த போது கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் என்னால் மீண்டும் அமெரிக்காவிற்கு செல்ல முடியவில்லை. படிப்பையும் தொடர முடியவில்லை. இங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த மனநிலையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த கம்புசா தொழில்’’ என்கிறார் சென்னையை சேர்ந்த திவ்யா குமார்.

‘‘படிப்ைப தொடர முடியவில்லை. என்னால் திரும்பவும் அமெரிக்கா செல்ல இயலவில்லை. வீட்டின் சூழலும் கை கொடுக்கவில்லை. இதனால் என்னுடைய மனநிலை பெரிய அளவில் பாதிப்படைந்தது. அதில் இருந்து மீள வேண்டும் என்று விரும்பினேன். ஏதாவது ஒரு ெதாழில் செய்ய வேண்டும் என்று மட்டும் என் மனதில் அலாரம் அடித்துக் கொண்ேட இருந்தது. ஆனால் என்ன செய்வதுன்னு புரியல, தெரியவும் இல்லை.

அந்த நேரத்தில்தான் என் பக்கத்து வீட்டினர் இந்த கம்புசாவை எனக்கு பருக கொடுத்தாங்க. குடித்து பார்த்த போது எனக்கு அதன் சுவை ரொம்பவே பிடித்திருந்தது. மேலும் அதில் பல மருத்துவ பலன்களும் உள்ளது என்று தெரிந்து கொண்டேன். ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்த நான் இதையே ஏன் தொழிலாக செய்யக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுகுறித்து என் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கேட்ட போது அவங்க எனக்கு கம்புசா ஸ்கூபியை கொடுத்தாங்க. (SCOBY – symbiotic culture of bacteria and yeast). கம்புசா ஸ்கூபி என்பது கம்புசா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட். இது பார்க்க ஜெல்லி வடிவத்தில் இருக்கும்.

இந்த ஜெல்லியை கம்புசா சாறில் சேர்க்கும் போது அது அதனை புளிக்க செய்ய வைக்கும். மேலும் அதில் இருந்து இன்னொரு ஸ்கூபி உருவாகும். இப்படி உருவாகும் ஸ்கூபியைக் கொண்டு நாம் பலவித ஃபிளேவர்களில் கம்புசா தயாரிக்கலாம். இதனை வீட்டில் இருந்தே செய்யலாம் என்பதால், நான் இதையும் ஒரு தொழிலாக செய்யலாம் என்று முடிவு செய்தேன்’’ என்று கூறும் திவ்யா இதற்காக ஒரு சிறிய அளவில் தயாரிக்கும் கூடம் ஒன்றை பனையூரில் அமைத்து அங்கு கம்புசாவினை முழுமையாக தயாரித்து வருகிறார்.

‘‘எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும். கம்புசா என்றால் என்ன? அது மதுபானமா… அதனை எல்லோரும் சாப்பிடலாமா? எப்படி எதனைக் கொண்டு தயாரிக்கிறார்கள்? இப்படி பல கேள்விகள் எழும். கம்புசா என்பது, ஃபெர்மன்ட் செய்யப்பட்ட டீ. அதாவது, நொதிக்கப்பட்ட டீ. உதாரணத்திற்கு பாலில் தயிர் சேர்த்து அதை மீண்டும் தயிர் ஆக்குவது போலதான், டீ டிகாஷனில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கம்புசா சாறு அல்லது கம்புசா ஸ்கூபியினை சேர்த்து அதனை ஃபெர்மன்ட் செய்யப்படும். இதன் சுவை புளிப்பு, இனிப்பு மற்றும் சோடாவில் இருக்கும் அந்த fizz உணர்வும் இருக்கும். இவை எல்லாம் இயற்கையாகவே உருவாகிறது. இதனை செயற்கை முறையில் உருவாக்கப்படும் மற்ற கோலா பானங்கள் போல் தயாரிக்கப்படுவதில்லை.

இயற்கை முறையில் நொதிக்க வைப்பதால், அதில் இயற்கையாகவே அந்த சுவையினை நமக்கு தருகிறது. இதனை செய்வது மிகவும் சுலபம். தண்ணீரில் டீ தூளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கரைந்ததும் மேலும் தண்ணீர் சேர்த்து கொம்புசா ஸ்கூபி அல்லது கொம்புசா சாறு சேர்த்து நான்கு வாரங்கள் அப்படியே கண்ணாடி பாட்டிலில் வைத்திருந்தால், கொம்புசா ரெடி. இது மதுபானம் கிடையாது’’ என்றவர் இதன் பலன்களையும் விளக்கினார். ‘‘நம்முடைய குடலுக்கு புரோபயாடிக்ஸ் மிகவும் நல்லது. அது கெட்ட பாக்டீரியாவினை நீக்கி அங்கு நல்ல பாக்டீரியா வளர செய்து அதன் மூலம் குடலின் ஆரோக்கியத்தை காக்கும்.

கம்புசாவில் புரோபயாடிக்ஸ் நிறைந்துள்ளதால், அது உடலில் நல்ல பாக்டீரியா வளர உதவுகிறது. எங்களின் கம்புசா நிறுவனம் கம்புசா உற்பத்தியாளர்களின் சர்வதேச அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் உள்ளது. அங்கு நான் பல முறை சென்று இதனுடைய பல்வேறு ஃபிளேவர்களின் தயாரிப்பு முறையை அறிந்து வந்திருக்கிறேன்.

நாங்க தற்போது இந்தியா முழுக்க வியாபாரம் செய்து வருகிறோம். எங்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சென்னை மற்றும் தமிழ்நாட்டில்தான் உள்ளனர். மேலும் திருவண்ணாமலை மற்றும் கோயம்புத்தூரில் ஆர்கானிக் கடைகளில் எங்களின் பொருட்கள் கிடைக்கும். ஒரு பாட்டில் கம்புசாவினை தயாரிக்க ஒரு மாத காலம் ஆகும். நாங்கள் இதனை சாதாரண டீத்தூள் கொண்டு செய்வதில்லை. அசாம் ஆர்தடாக்ஸ் டீ இலைகள் கொண்டுதான் தயாரிக்கிறோம்.

அசாமில் உள்ள தேயிலை தோட்டத்தில் பிரத்யேகமாக பழங்கால முறையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைதான் இந்த ஆர்தடாக்ஸ் தேயிலை. இது நம் இதயத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிக உறுதுணையாக உள்ளது. இந்த இலைகள் கொண்டு தயாரிக்கப்படும் கம்புசாவில் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ப்ரோபயாட்கள் உள்ளன. இதில் நாம் விரும்பும் பழம் மற்றும் பூக்களின் ஃபிளேவர்களை ேசர்த்தும் தயாரிக்கலாம்.

உதாரணத்திற்கு நம் தோல் பளபளப்பாகவும், முடி நன்கு வளர செம்பருத்தி உதவுகிறது. செம்பருத்தி பூவினை 20 நாட்கள் கம்புசா சாறில் ஊறவைக்க வேண்டும். பிறகு பூவினை எடுத்துவிட்டு பத்து நாட்கள் பதப்படுத்தினால், செம்பருத்தி கம்புசா தயார். இதில் செம்பருத்தியில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் சேர்வதால் நமக்கு ஆகப்பெறும் பயன்களை அளிக்கிறது. இதே போல் பழங்கள், ஆயுர்வேதப் பொருட்கள், மூலிகைகள் கொண்டு 35க்கும் ேமற்பட்ட ஃபிளேவர்களில் நாங்க கம்புசாவினை தயாரிக்கிறோம்.

இது ஜீரணக் கோளாறு, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் போன்றவற்றை நீக்கி வயிறு சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கூட மதுவை நிறுத்திவிட்டு இதை பருகலாம். அவர்களுக்கு மதுவுக்கு பதில் நல்ல மாற்றாக இருக்கும். மேலும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது ஒரு நல்ல ஆல்டர்நேட்டிவ் சோர்ஸ் ஆக இருக்கும். கம்புசாவினை வாங்கும் போது அது இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதா அல்லது அன்சாச்சுரேட்டட்டா என்று கவனமாக பார்த்து வாங்க வேண்டும்’’ என்று கூறும் திவ்யா இதனை ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் விற்பனை செய்து வருகிறார்.

தொகுப்பு: திலகவதி

படங்கள்: கிருஷ்ணமூர்த்தி

The post மூலிகை, பழம், பூ கம்புசா… appeared first on Dinakaran.

Related Stories: