நான் பெயின்டிங் செய்யும் புடவைகளுக்கு நானே மாடல்!

நன்றி குங்குமம் தோழி

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்கள் சொந்தமாகவும் தனித்துவமானதாகவும் பல்வேறு தொழில்களை செய்து சாதித்து வருகின்றனர். அந்த வகையில், ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது போல தனக்குள் ஒளிந்து கிடந்த ஓவியத் திறமையை மெருகேற்றி இன்று தனக்கென இத்துறையில் தனி இடத்தை பிடித்துள்ளார் ரமா ராஜேஷ். தஞ்சாவூர் பெயின்டிங் வரைவது, புடவைகள், ப்ளவுஸ்கள் மற்றும் சுடிதார்களில் ஃபேப்ரிக் பெயின்டிங் செய்வது என பட்டையைக் கிளப்பி வருகிறார். திருப்பூரில் சொந்தமாக ‘ஹிதயா’ என்கிற ஆர்ட் கேலரியை நடத்தி வரும் இவர், தான் வடிவமைக்கும் அழகியல் நிறைந்த ஃபேப்ரிக் புடவைகளுக்கு இவரே மாடல் என்பது கூடுதல் சிறப்பு.

‘‘பெண்கள் ஏதாவது ஒரு கை வேலைப்பாடுகளை தெரிந்து வைத்திருப்பது என்பது அவர்களின் வாழ்வில் மிகச்சிறப்பானது’’ என்னும் ரமா ராஜேஷ் பெயின்டிங் மற்றும் புடவை டிசைன் குறித்து பகிர்ந்து கொண்டார்.

பெயின்டிங் ஆர்வம்…

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான திறமை அவர்களுக்குள் ஒளிந்திருக்கும். அதனை மேம்படுத்தினாலே போதும், எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். சிறு வயதிலிருந்தே எனக்கு ஓவியத்தின் மேல் அதிக ஆர்வம் இருந்தது. என் 15 வயது முதலே நான் வரைய ஆரம்பித்தேன். அதன் மேல் இருந்த ஈடுபாட்டின் காரணமாக அந்த துறையில் புகழ்பெற்ற பலரிடம் இருந்து பாராட்டுகள் மற்றும் பரிசுகளை பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிகமாக இருந்தது. நான் பி.காம், எம்.சி.ஏ படித்திருந்தாலும், ஓவியத்தின் மீதிருந்த அதீத காதலால் இங்கிலாந்து சென்று அங்கு ஒன்றரை வருடம் ஓவியப் படிப்பான பைன் ஆர்ட்ஸ் அண்ட் டிசைன் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றேன்.

ஆறுமாதம் அங்கே வேலை பார்த்தேன். இந்தியா திரும்பிய பிறகு என்னுடைய ஓவியத் தொழிலை தொடர்ந்தேன். 1998 முதல் ஓவியம் வரைவதை தொழிலாக செய்து வருகிறேன்.
அப்போது பேலட் என்கிற பெயரில் ஓவியங்களை வரைந்து விற்பனை செய்து வந்தேன். 2017க்கு பிறகுதான் ‘ஹிதயா’ என்ற பெயரில் ஆர்ட் கேலரியை துவங்கி தற்போது வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.

தஞ்சாவூர் ஓவியங்கள்…

தஞ்சாவூர் ஓவியங்கள் 17-ம் நூற்றாண்டை சேர்ந்தது. தஞ்சை சரபோஜி மன்னரால் ஊக்குவிக்கப்பட்டதால், தஞ்சாவூர் ஓவியம் என புகழ்பெற்றது. இது சோழ மன்னர்களால் பெரிதும் வளர்க்கப்பட்டது என்றும் சொல்லலாம். தற்போதும் தஞ்சாவூர் ஓவியங்களை ரசிக்கவும், வாங்கவும் நிறைய கலை ஓவிய ரசிகர்கள் இருக்கிறார்கள். தலைசிறந்த படைப்புகளுக்கு எப்போதுமே ஒரு தனிப்பட்ட கௌரவமும், சிறப்பான வருமானமும் உண்டு. தஞ்சாவூர் ஓவியத்திற்கான மதிப்பு தற்போது வரை கொஞ்சமும் குறையவில்லை. தமிழ்நாடு, இந்தியா
மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இதற்கான விற்பனை வாய்ப்புகள் மிகச் சிறப்பாக இருக்கிறது. தஞ்சாவூர் ஓவியம் வரைவது என்பது ஆத்மார்த்தமான ஒன்று.

முற்காலங்களில் தஞ்சாவூர் ஓவியத்தின் வண்ணங்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது. இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஓவியங்கள் இன்றளவிலுமே காலத்தால் அழியாத ஓவியங்களாக சிறப்பான வகையில் கோலோச்சி நிற்கின்றன. அதே போல் ஓவியங்களில் அலங்காரத்திற்காக பதிக்கப்படும் கற்களும் கைகளால் செதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. அதாவது வெறும் ரசக் கண்ணாடியில் வண்ணம் ஏற்றி அதனை கற்களாக மாற்றும் வேலைப்பாடு மிகச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

தற்போதைய தஞ்சாவூர் ஓவியங்களை ஒரிஜினல் தங்க இழைகள் மற்றும் அமெரிக்கன் டைமண்ட் பயன்படுத்தி மிகச்சிறப்பான வகையில் தயாரித்து தருகிறோம். கடவுள்களின் ஓவியங்களை பெரும்பாலும் தஞ்சாவூர் ஓவியங்களில் தான் வரைவார்கள். பாரம்பரிய கலையான தஞ்சாவூர் ஓவியக் கலையை, எந்தவிதமான கலப்படமும் இல்லாமல் அதன் பாரம்பரிய தன்மை மாறாமல் வரைவதே அதன் தனிச்சிறப்புதான். எக்காலத்திலும் தஞ்சாவூர் ஓவியங்களுக்கான வரவேற்பு என்பது மிகப் பிரமாதமான ஒன்றாகத் தான் இருக்கும்.

ஃபேப்ரிக் பெயின்டிங் புடவை…

பல ஆண்டுகளுக்கு முன்பே துணிகளில் பெயின்டிங் செய்யும் கலைகள் இருந்துள்ளது. மறுபடியும் இந்த ஃபேப்ரிக் பெயின்டிங் மிகப்பெரிய ட்ரெண்டிங்காக உள்ளது. இதனை நிறைய பேர் விரும்பி வாங்குகிறார்கள். இதனை விரும்பிய வண்ணங்களில் விரும்பிய டிசைன்களில் கஸ்டமைஸ் செய்து தருகிறோம். ஃபேப்ரிக் பெயின்டிங்கில் மதுபானி, தாஞ்சூர், பிச்சுவாய், டோட் பேக் பெயின்டிங், டை அண்ட் டை என்று பல்வேறு வகைகள் உள்ளன. தற்போது இதில் நம்மை அழகாய் காண்பித்துக் கொள்ள பல வகையான நவீன தொழில் நுட்பங்கள் இதில் வந்துள்ளது. அதில் ஒன்றுதான் ஃபேப்ரிக் வகை ஆடைகள். அதாவது கை வேலைப் பாடுகள் நிறைந்த ஆடைகள் என்பதால் தற்பொழுது வரை இதற்கான மவுசு சற்றும் குறையாத வகையில் இருக்கின்றது என்பது தான் இதன் சிறப்பம்சம்.

உங்களது ஓவியங்களும் வாடிக்கையாளர்களும்…

எங்கள் ஓவியங்களை கடல் கடந்து செல்பவர்கள் கூட ஆசையாக வாங்கி செல்கிறார்கள். அவர்கள் வீட்டில் கொண்டாடும் விசேஷங்களுக்கு ரிட்டன் கிஃப்டாக கூட வாங்குகிறார்கள். மேலும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் நிறைய வாடிக்கையாளர்கள் எங்களிடம் ஓவியங்கள் வாங்க முன் வருகிறார்கள். சில சமயம் வாடிக்கையாளர்களின் இடத்திற்கு நேரடியாக சென்றும் வரைந்தும் தருகிறோம். ஆனால் எங்க ஆர்ட் கேலரிக்கு நேரிடையாக வந்து ஓவியங்களை வாங்கி செல்பவர்கள்தான் அதிகம்.

மேலும் நாங்க வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஓவியங்களை கஸ்டமைஸ் செய்து தருவதால் அதன் மூலம் நிறைய நல்ல வாடிக்கையாளர்களை சம்பாதித்து இருக்கிறோம். எங்களது தஞ்சாவூர் ஓவியங்கள் வரையப்பட்ட தட்டுகளை திருமணங்களில் மாப்பிள்ளைக்கு உடைகளை வைத்து தரவும் வாங்கி செல்கிறார்கள். மேலும் பெரிய ஹோட்டல்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், ரிசார்டுகள் போன்றவற்றில் எங்களது மியூரல் ஓவியங்களை விரும்பி வாங்கி வைக்கிறார்கள். மியூரல் ஓவியங்களை அவர்கள் விரும்பும் வண்ணத்தில், விரும்பிய வடிவத்தில், விரும்பிய இடத்தில் சென்று வரைந்து தருகிறோம். வாடிக்கையாளர்கள் திருப்தியே எங்களது வெற்றிக்கு முக்கியமான காரணமாக சொல்லலாம்.

ஓவிய பயிற்சி வகுப்புகள்…

நான் ஓவிய பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் மூலமாகவும், நேரிடை வகுப்புகள் மூலமாகவும் பலருக்கு கற்றுத் தருகிறேன். நிறைய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஒர்க் ஷாப் நடத்திய அனுபவங்களும் உள்ளது. மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கு இலவச ஓவிய பயிற்சி வகுப்புகளையும் அளிக்கிறேன். என்னிடம் கற்ற நிறைய பேர் தற்போது வெற்றிகரமாக இத்தொழிலை செய்து வருகிறார்கள். எதிர்காலத்தில் நிறைய ஓவியர்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

விருதுகள் மற்றும் பாராட்டுகள்…

இந்த ஓவியத் துறைக்கு வந்த பிறகு இதற்கென ஏராளமான விருதுகளும் பாராட்டுதல்களும் பெற்றிருக்கிறேன். சக்தி விருது, இந்தியன் அசோசியேஷன் வழங்கிய பெண் சாதனையாளர் விருது, டிவைன் ஃபைன் ஆர்ட்ஸ் வழங்கிய மகிளா விருது, ஐகானிக் விருது, நேரு எஜூகேஷன் இன்ஸ்டிடியூட் வழங்கிய பெண் எக்ஸலன்ஸ் விருது உட்பட ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறேன். விருதுகள் பல வாங்கினாலும், சிறப்பு குழந்தைகளுக்காக இலவச வகுப்புகளை எடுத்து வருவது மிகுந்த மன நிறைவாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. இன்னும் இது போல நிறைய செய்ய வேண்டும் என்கிற ஆர்வமும் உந்துதலும் ஏற்படுகிறது.

தொழில் துவங்க நினைக்கும் பெண்களுக்கு…

தஞ்சாவூர் ஓவியங்கள் வரைய நிறைய டெடிகேஷன், அர்ப்பணிப்பு திறன், கைத்திறன் அவசியம். இதனை தயாரிக்க செலவுகள் கொஞ்சம் கூடுதல்தான். ஆனால் அதன் விற்பனையில் கணிசமான வருமானம் ஈட்ட முடியும். ஃபேப்ரிக் பெயின்டிங் பொறுத்தமட்டில், பெண்கள் இதனை தொழிலாக செய்வதன் மூலம் முதலீடு அதிகம் இல்லாமல் வருமானம் ஈட்ட முடியும். வீட்டிலேயே இந்தத் தொழிலை ஆரம்பித்து புடவை, சுடிதார் மற்றும் பிளவுஸில் ஃபேப்ரிக் பெயின்டிங் வரைந்து தரலாம்.

ஃபேப்ரிக் புடவைகள் நவீன காலகட்டத்தில் மிகச் சிறந்த டிரெண்டாகவும் இருப்பதால் அதற்கான வரவேற்பும் அதிகமாகவே உள்ளது. இயல்பாகவே ஓவியக்கலையின் மீது ஆசையும், ஓவியம் வரையும் திறனும் இருந்தால் இத்துறையில் நன்றாக அசத்தலாம். அதனைக் கொண்டு ஒரு நிரந்தரமான வருமானமும் கிடைக்கும், அதற்கு தேவை கைத்திறனோடு நல்ல கற்பனைத் திறன், ஆர்வம் என்கிறார் பெண் தொழில்முனைவோர் ரமா ராஜேஷ்.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

The post நான் பெயின்டிங் செய்யும் புடவைகளுக்கு நானே மாடல்! appeared first on Dinakaran.

Related Stories: