பனை ஓலையில் பளிச்சிடும் ஓவியங்கள்

நன்றி குங்குமம் தோழி

‘‘ஃபுட் பிராசசிங்கில் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு முடிச்ச கையோடு அது சார்ந்த ஒரு நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறேன். படிச்சது பொறியியல் என்றாலும் எனக்கு கலை துறை மேல் தனிப்பட்ட ஆர்வம் அதிகம். அதனால் பனை ஓலையில் சித்திரங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வது குறித்து ஒரு வருடம் பயிற்சி எடுத்தேன். இப்போது படிச்ச பட்டப் படிப்பு சார்ந்த தொழில் நடத்தி வந்தாலும், என்னுடைய விருப்பமான கலை துறையிலும் என்னை ஈடுபடுத்தி வருகிறேன்’’ என்கிறார் மதுரையை சேர்ந்த ஹரிணி.

மதுரையில் கடந்த வாரம் பனை ஓலை கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது. அதில் இவர் பெண்களுக்கு பனை ஓலையில் எவ்வாறு ஓவியங்கள் மற்றும் கலைப் பொருட்கள் செய்வது குறித்து பயிற்சி அளித்தார். இவரிடம் அந்த பயிற்சியில் ஏழு வயது முதல் 70 வயதுடைய சிறுமிகள், இளம் பெண்கள், வயதானவர்கள் என அனைத்து வயதினரும் பனை ஓலை ஓவியங்களை ஆர்வமாக கற்றுக் கொண்டனர்.

‘‘பனை நமது மாநில மரம். பனை மூலம் இவ்வளவு செய்ய முடியுமா என்பதே பலருக்கு தெரியாது. பனையின் சிறப்புகளை கூறுவதே இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம். குறிப்பாக பெண்கள் இந்த பனை ஓலையில் பளிச்சிடும் ஓவியங்கள் வரைவதை கற்றுக்கொண்டும், பனை ஓலையை வைத்து பனை கைவினை கலைப்பொருட்கள் தயாரிக்க தெரிந்து கொண்டும் இவற்றை விற்பனை செய்து வருமானம் பெற முடியும். இவைகளுக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. பனை மரங்கள் வளர்த்தும் பல பயன்கள் பெறலாம். பனம்பழம், நொங்கு, பதனீர், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்ற பலவற்றையும் தயாரித்து விற்பனை செய்து நல்ல வருமானம் உறுதியாக பெற முடியும்.

ஆனால் இதில் மிகுந்த உறுதியான ஈடுபாடும், பொறுமையும் அவசியம் தேவை. ஒடிசா மாநிலத்தில் மட்டுமே பனை ஓலை ஓவிய கலைஞர்கள், கைவினைப் பொருட்களை தயாரிக்கும் கலைஞர்கள் பலர் உள்ளனர். ஆனால் அங்கே பனைமரங்கள் குறைவு. மூன்று கோடி மரங்கள் உள்ள தமிழ்நாட்டில் பனையின் அருமை பெருமைகள் தெரியாமல் இருக்கிறது. சாராயத்தை போல கள் உடல் நலனை கெடுப்பதில்லை. அளவோடு பருகினால் கள்ளும் ஒரு நல்ல மருந்துதான்.

ஒரு மரத்து கள் தொடர்ந்து மருந்தாக குடித்தால் நல்லது என்று நம் முன்னோர்கள் சொல்லியது உண்டு. கள்ளில் மைக்ரோன்ஸ் சத்துகள் நிறைந்துள்ளது. இந்தியாவில் 70% மக்கள் மைக்ரோன் சத்துக் குறைபாடுகளுடன் வாழ்கிறார்கள். கள்ளில் அத்தனை மைக்ரோன் நியூட்ரியன்ஸ் இருக்கிறது. ஆனால் அதை மக்கள் போதைப் பொருளாகத் தான் பார்க்கிறார்கள். அதனால் கள்ளாக குடிப்பதற்கு பதில் பதநீராக பருகலாம். இதில் கால்சியம், மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது.

கலிங்கப் போர் வந்த போது சோழ மன்னர்கள் ஒடிசா மாநிலம் கொண்டு சென்ற கலைதான் பனை ஓலை சித்திரக்கலை. இந்த பனை ஓலை ஓவியங்களை நம் நாட்டினரும், வெளிநாட்டினரும் அறுபதாயிரம், எழுபதாயிரம் ரூபாய்கள் வரை கூட கொடுத்து வாங்கி செல்கிறார்கள். இந்த பனை ஓலை ஓவியங்களை வரைந்து பெண்களால் நிச்சயமாக சம்பாதிக்க முடியும். அந்த அளவு பனை மரம் வருமானம் ஈட்டித்தரும்’’ என்றவர் பனை ஓலை ஓவியங்கள் குறித்து விவரித்தார்.

‘‘ஒவ்வொரு ஓவியமும் முழுமையாக வரைந்து முடிக்க அதன் அளவைப் பொறுத்து மாறுபடும். இதில் A4 பேப்பர் அளவு முதல் பெரிய பேனர் அளவு வரை வரையலாம். ஒவ்வொரு பனை ஓலைகளையும் ஒன்று சேர்த்து அதன் மீது ஓவியங்களை தீட்டுவதில்தான் திறமை இருக்கிறது. அதன் அளவுக்கு ஏற்ப சில மணி நேரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகும். மிகவும் நுட்பமாகவும் பொறுமையுடன் செய்யக் கூடிய அற்புதமான கலை இந்த பனை ஓலை ஓவியங்கள். உண்மையை சொல்லப் போனால் இதற்கு விலை மதிப்பே கிடையாது. இந்த ஓவியங்களின் அழகு காண்பவரை வியக்க வைக்கும்.

கல்லிலே கலை வண்ணம் காணும் சிற்பிகள் போல் பனை ஓலையில் வண்ண ஓவிங்கள் பிரமிக்க வைக்கக்கூடிய கலை. ஒருமுறை மதுரை மீனாட்சி அம்மனின் வாழ்க்கை முறையை பனை ஓலையில் காட்சிப்படுத்த வேண்டும் என்று என்னிடம் வந்து கேட்டார்கள். நான் வரைந்து கொடுத்தேன். அதன் பிறகு தசாவதாரம், விநாயகரின் ஓவியங்கள் என்னால் மறக்க முடியாது. தெய்வங்கள் மட்டுமில்லாமல், மாடர்ன் ஓவியங்களை கூட பனை ஓலையில் வரையலாம்’’ என்றவர் பெண்களுக்கு அளிக்கும் பயிற்சிகள் குறித்து விவரித்தார்.

‘‘நான் கற்ற கலையை மற்றவர்களுக்கு சொல்லித்தரும் போது தானே ஆத்ம திருப்தி ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு இதன் மூலம் ஒரு வருமானம் ஏற்படுத்தி தர முடிகிறது என்று நினைக்கும் போது அப்போது கிடைக்கும் ஆனந்தமே தனிதான். என்னிடம் பயிற்சி பெற வரும் பெண்கள் அனைவரும் முழு ஈடுபாட்டோடு கற்றுக் கொள்கிறார்கள். அதில் எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் வரையும் ஒரு சில பெண்களின் ஓவிய ஆற்றல் எனக்கு ஆச்சரியம் அளித்திருக்கிறது.

என்னுடைய நிறுவனம் மூலம் உணவு குறித்த பல ஆய்வுகளை செய்து வருகிறோம். அதில் அவிச்ச முட்டையின் செயல்முறையை ஆய்வு செய்து வருகிறோம். பனை ஓலையில் ஓவியங்கள், கலைப் பொருட்கள் தயாரிப்பினை மேலும் பல பெண்களுக்கு கற்றுத்தந்து அவர்கள் வீட்டில் இருந்தபடியே வருமானம் பெற வைக்க வேண்டும் என்பதே என் எதிர்கால லட்சியம்’’ என்றார் ஹரிணி.

தொகுப்பு: விஜயா

The post பனை ஓலையில் பளிச்சிடும் ஓவியங்கள் appeared first on Dinakaran.

Related Stories: