கிறிஸ்தவம் காட்டும் பாதை

மாவீரர் அலெக்சாண்டர், நோய்வாய்பட்டு மரிக்கும் தருவாயில் தன் தளபதிகளை அழைத்து, ‘‘நான் இறந்த பிறகு, திறந்திருக்கும் எனது கைகள் வௌியே தெரியும் வண்ணம் சவப்பெட்டி செய்து என் உடலை மூடுங்கள், அவ்வாறு ஜனங்கள் என்னை பார்த்த பிறகே என்னை அடக்கம் செய்ய வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார். இதனைக் கேட்ட ஒரு தளபதி அவரிடம், ‘‘அரசே எதற்காக நீங்கள் அவ்வாறு செய்ய விரும்புகிறீர்கள் என தெரிந்துகொள்ளலாமா?’’ எனக்கேட்டார். அப்போது அலெக்சாண்டர், ‘‘ஆம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும், என்னவெனில் உலகையே வென்ற மாவீரன் அலெக்சாண்டர், வெறுங்கை யுடனே இந்த உலகினில் பிறந்தார், போகும் போது வெறும் கையுடனே தான் போனார் என்பதை மக்கள் உணரவேண்டும் அதற்காகத்தான்’’ என்றார்.இப்பூவுலகில் பிறக்கும்போது நாம் எதையும் கொண்டு வந்ததுமில்லை, இவ்வுலகைவிட்டு கடந்து செல்லும் போதும் நாம் எதையும் கொண்டு போவதுமில்லை. இரண்டிற்கும் இடைப்பட்ட நிரந்தரமற்ற வாழ்க்கையில் எத்தனை போராட்டம்? எத்தனை பிரிவுகள்? மனிதனை மனிதனாக மதியாத மனிதர்களை நிதமும் செய்திதாள்கள் படம்பிடித்து காட்டுகின்றன. ஆறடி நிலத்திற்கும் உரிமைபாராட்ட முடியாத உலகமிது.

நூறு ரூபாய் பொருளுக்கு போட்டி போட்டு உத்திரவாதம் கேட்கும் உலகில், மனித உயிர்களுக்கு மட்டும் உத்திரவாதமில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இந்த உண்மையை நாம் உணர்ந்து ஏற்றுக் கொண்டால் நாம் வாழும் ஒவ்வொரு மணித்துளியும் உபயோகமானதாக மாற்றி வாழலாம். ஆனால், நாம் வாழ்க்கையில் பாதி நேரம் தூக்கத்துடனும் மீதி நேரம் ஏக்கத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு நாளைக்கு சுமார் 60000 விஷயங்களை நம் எண்ணங்கள் மூலம் நாம் நினைத்து கொண்டிருப்பதாக உளவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வளவு குழப்பமும், கற்பனையும் அவசியமற்றது. இதனால் உடலும், மனமும் சோர்வு அடைவதுதான் மிச்சம்.‘‘மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப் போல் பூக்கிறான். காற்று அதன்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது’’ (சங்கீதம் 103:15,16) என வேதம் கூறுகிறது. ஒரு வாழ்க்கைதான். அந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள். தீர்வில்லாத பிரச்னைகள் எதுவுமில்லை. ஆகவே உங்களை மட்டுமல்ல, உங்களை சார்ந்தவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். சுய நிலத்தை தவிர்த்து பொதுநல வாழ்க்கைக்கு பழகுங்கள்.‘‘அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்து சிந்தையே உங்களிலும் இருக்கக்கூடாது’’ (பிலி.2:4,5)

– அருள்முனைவர் பெவிஸ்டன்.

The post கிறிஸ்தவம் காட்டும் பாதை appeared first on Dinakaran.

Related Stories: