அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் கடந்த 2018-2019ம் ஆண்டு காலக்கட்டத்தில் 500 பேருக்கு இலவச தையல் பயிற்சி வழங்கி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 6 மாத கால பயிற்சிக்கு ரூ.12 ஆயிரம் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்படி அப்போதைய நெல்லை மாவட்டத் தொழில் மைய மேலாளர் முருகேஷ் நெல்லை டவுனில் உள்ள தனியார் தையல் பயிற்சி பள்ளியில் 116 பேருக்கு பயிற்சி அளிக்க அனுமதி வழங்கினார். அதுபோல், மேலப்பாளையத்தில் உள்ள தையல் பயிற்சி பள்ளிக்கு 40 பேருக்கு பயிற்சி அளிக்க அனுமதி வழங்கினார். மேலும், மற்றொரு தையல் பயிற்சி பள்ளிக்கு 19 பேருக்கு பயிற்சி அளிக்க அனுமதி வழங்கி உள்ளார்.
இந்த பயிற்சி மைய உரிமையாளர்களுக்கு பயிற்சிக் கட்டணமாக அம்மா திறன் பயிற்சி மற்றம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணத்தை மாவட்ட தொழில் மைய மேலாளர் கொடுக்க வேண்டும். ஆனால் அப்போதைய மேலாளர் முருகேஷ், 3 பயிற்சி மைய உரிமையாளர்களுக்கு தர வேண்டிய ரூ.21 லட்சத்தை தராமல் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முருகேஷ் சுமார் ரூ.21 லட்சம் அரசு பணத்தை முறைகேடு செய்து அவரது கூட்டாளிகளான முருகன், மதன்குமார் ஆகியோரது வங்கி கணக்குகளுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து முருகேஷ் உட்பட 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முருகேஷ் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலும் நெல்லை மாவட்ட அரசு தொழில்மைய மேலாளராக பணியாற்றியபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடியே 11 லட்சத்து 47 ஆயிரத்து 737-க்கு சொத்து குவித்து இருப்பதாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீதும் அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
The post மாஜி அரசு அதிகாரி ₹21 லட்சம் கையாடல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு appeared first on Dinakaran.