சட்டமேலவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்: மகாராஷ்டிரா காங். தலைவர் நானா படோலே திட்டவட்டம்

மும்பை: நடந்து முடிந்த சட்டமேலவை தேர்தலில், கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என, காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறினார். மகாராஷ்டிராவில் 11 சட்டமேலவை இடங்களுக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 9 இடங்களில் ஆளும் மகாயுதி கூட்டணி வேட்டாளர்கள் வெற்றி பெற்றனர். பாஜவுக்கு 5, ஷிண்டே சிவசேனா மற்றும் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 2 இடங்கள் கிடைத்தன.

எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாடியில் உத்தவ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் மட்டும் கிடைத்தன. சரத்பவார் கட்சி ஆதரித்த வேட்பாளரும் தோல்வியை தழுவினார். இந்த தேர்தலிலில் குறைந்த பட்சம் 7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணி மாறி வாக்களித்திருப்பதும் அம்பலம் ஆனது. இது குறித்து மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

சட்ட மேலவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்து துரோகிகளாக மாறிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடையாளம் காணப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இதே துரோகிகள் தான் , 2 ஆண்டுக்கு முன்பு நடந்த தேர்தலில் சந்திரகாந்த் ஹந்தோர் தோல்வி அடையக் காரணமாக அமைந்தவர்கள். தற்போது வலையில் வசமாகச் சிக்கிக் கொண்டு விட்டனர். அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அப்போதுதான், கட்சிக்கு இனி துரோகம் செய்ய யாருக்கும் எண்ணம் வராது. இவ்வாறு படோலே கூறினார்.

The post சட்டமேலவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்: மகாராஷ்டிரா காங். தலைவர் நானா படோலே திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: