சென்னை: தமிழ்நாடு முழுவதிலும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ கடந்த 15.9.2022 அன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்திற்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பினையும், மாணவ, மாணவிகள் இடையே ஏற்பட்ட எழுச்சியையும் கருத்தில் கொண்டு 25.8.2023 அன்று கலைஞர் பிறந்த ஊராகிய திருக்குவளையில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு, 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் காலை உணவை சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளி பாடங்களில் கவனம் செலுத்தி படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் வகையில், முதல்வர் முக.ஸ்டாலின் நாளை (15ம் தேதி) காமராஜர் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் மொத்தமுள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள். விழாவில், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், கலந்து கொள்கின்றனர்.
The post 3,995 அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.