செங்கல்பட்டு நகராட்சியில் சேப்பாட்டி அம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்


செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி நத்தம் பகுதியில் இன்று காலை சேப்பாட்டி அம்மன் கோயிலில் தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு நகராட்சி நத்தம் பகுதியில் வீற்றிருக்கும் சேப்பாட்டி அம்மன் கோயில், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. இந்த கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2021ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாமல், கோயில் வளாகத்திலேயே நடந்தது. இந்நிலையில், 2018ம் ஆண்டுக்கு பிறகு, இந்தாண்டு இன்று காலை தேர் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. தேரில் மலர் மற்றும் ஆபரண அலங்காரத்துடன் சேப்பாட்டி அம்மன் அமர்ந்து வீதியுலாவாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து செங்கல்பட்டு நகரில் தேர் வீதியுலா வந்தது. இன்றிரவு செங்கல்பட்டு நகராட்சி அலுவலகம் எதிரே நிறுத்தப்பட்டு, நாளை காலை மீண்டும் வீதியுலாவாக வரும். நாளை இரவுதான் தேர், கோயில் வளாகத்தில் நிலைநிறுத்தப்படும். விழாவில் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, நகரமன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன்‌, கவுன்சிலர்கள், மாவட்ட அறநிலையத்துறை அதிகாரி சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

The post செங்கல்பட்டு நகராட்சியில் சேப்பாட்டி அம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: