பிரகஸ்பதி யார்?
மும்மூர்த்திகளில் படைக்கும் கடவுளான பிரம்ம தேவனின் மூன்றாவது புத்திரர் ஆங்கீரசர். சப்த ரிஷிகளின் ஒருவர். அவரின் மனைவியின் பெயர் வசுதா. இவர்களுக்கு ஏழு புத்திரர்களும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். அவர்கள் பெயர் பிருஹத்கீர்த்தி, பிருஹஜ் ஜோதிஸ், பிருஹத் பிரம்மா, பிரஹன்மனஸ், பிருஹன் மந்தர, பிருஹத் பாஸ்ஹ மற்றும் பிரகஸ்பதி என்ற ஏழு புத்தரர்களும், பானுமதி என்ற ஒரு பெண்ணும் பிறந்தார்கள்.
பிரகஸ்பதியின் பிறப்பின் ரகசியம்
யாகங்களுக்கு அதிபதி அக்னி. அக்னி பகவான், தேவேந்திர லோகத்தில் செய்யப் படும் பூஜைகளுக்கு முக்கியமானவர். இங்கு தினமும் செய்யப்படும் யாகத்தால், மக்கள் நலம் பெற்று வளத்துடன் வாழ்ந்தனர். ஏனோ தெரியவில்லை, அக்னிக்கு யாகம் செய்வதில் பிடிக்கவில்லை. அதனால் அவர் மனம் கொஞ்சம் அமைதியைத் தேடியது. அக்னி தனது வேலையில் சலிப்பு கொண்டு வெறுப்படைந்தார். தன்னுடைய தொழிலைவிட்டு வனம் சென்றார். சில காலம் வனத்தில் தன் மனம் மகிழும் படி அங்கும், இங்கும் திரிந்து வாழ்ந்தார். அப்பொழுது இந்திரலோகத்திற்கு தினமும் யாகம் செய்வதற்கு அக்னி இல்லாததால், யாகங்கள் நடைபெறவில்லை. நாட்டில் வறுமை சூழ்ந்தது. இருள் மூண்டது. எங்கும் பஞ்சம்
ஏற்பட்டது.
ஆகுதியைப் பெறக்கூடியவர்கள் யாருமில்லை என்பதால், அவரவர் பணியை செய்ய முடியாமல் நிலை குலைந்தனர். நாட்டில் மழை இல்லாமல் பயிர்கள் வாடின, உயிரினங்கள் தாவரங்கள் கால்நடைகள் சித்திரவதை அனுபவித்தனர். மனிதர்களுக்கு தண்ணீர் இல்லாமல் வாழ்வாதாரம் சீர்குலைந்தது. மக்களின் துயரத்தைக் கண்ட முனிவர்கள் யாகத்தை நடத்த ஆங்கிரஸ முனிவரிடம் சென்று முறையிட்டனர். உண்மையை உணர்ந்து முனிவர், தேவலோகத்திற்கு சென்றார்.
யாகத்தை தினமும் நடத்தி கொடுத்தார். இதனால், பஞ்சம் ஒழிந்தது மக்கள் செழிப்பாக வாழ்ந்தனர். வனத்தில் இருந்த அக்னி சலிப்பு குறைந்தது. தவற்றை உணர்ந்தார். தேவலோகத்தில் ஆங்கிரசர் பூஜை செய்வதையும் அறிந்தார். மீண்டும் தேவலோகத்தில் தன்பணியாற்ற விரும்பினார். வனத்திலிருந்து புறப்பட்ட அக்னி, ஆங்கீஸ்சரை சந்தித்தார். அக்னியை கண்ட முனிவர், மகிழ்ச்சியடைந்து அவரது வேலையை அக்னியிடமே திருப்பி அளிப்பதாக கூறினார்.
இதுவரை ஆங்கிரசர் பொறுமையாக அக்னி காரியத்தைச் செய்ததால், தேவலோகத்தில் இருப்போர், அவரின் கருணையைப் போற்றி “ஹவ்யவாஹான்’’ என்ற பட்டப் பெயரைக் கொடுத்தனர். அக்னிக்கு தன் பெயர் மறைந்ததை எண்ணி வருத்தப்பட்டாலும், ஆங்கிரசர் மீண்டும் தன்னுடைய பணியை தனக்குத் திருப்பித் தருவதால், சந்தோஷம் அடைந்தார் அக்னி. அக்னி, முனிவரிடம் இருந்து புது பிறவி பெறுவதாக கூறி, பிரகஸ்பதி என்ற பெயருடன் ஆங்கிரசருக்கு புத்திரனாக பிறந்தார். பிரகஸ்பதி, கல்வி, கேள்விகளில் சிறந்த விளங்கியவர். புத்திமானாகத் திகழ்ந்தார்.
சடங்குகள், சம்பிரதாயங்கள் மீது மிகவும் ஈடுபாடுக் கொண்டவர். தாரா என்பவளை மணந்தார். சம்யூ, நிஸ்சயவன, விஸ்வஜித், விஸ்வ புக், படபாக்னி, ஸ்விஷ்டக்ருத் என்ற ஆறு அக்னிகளையும், ஸ்வாஹா என்ற பெண்ணையும் உருவாக்கினார். நீண்ட தவம் யாகங்களும் செய்து, பிரம்மாவின் அருளைப் பெற்றார்.
பிரகஸ்பதி நிறுவிய லிங்கம்
பிரகஸ்பதி, குரு வாரமான வியாழன் என கொண்டாடப்படுகின்றார். நவகிரகங் களில் குரு ஸ்தானம் மிகவும் முக்கியமானதாகும். இவர், காசிக்கு ஒரு முறை சென்றிருந்தார். அங்கே ஒரு லிங்க மூர்த்தியை ஸ்தாபிதம் செய்தார். ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து, லிங்கத்தை பூஜை செய்தார். கடுமையாக அன்ன ஆகாரம் புசிக்காமல், சிவபெருமானை நோக்கியே தவம் இருந்தமையால், சிவபெருமான் இவர் தவத்துக்கு உகந்து உச்சி குளிர்ந்தார்.
“விடாது தவம் புரிந்த உன் அயராத பக்தியைக் கண்டு நான் மனம் உருகினேன். உனக்கு என்ன வரம் வேண்டும் என்றாலும் தருகிறேன். நீ இந்த லிங்கத்தின் மீது உன் மனதை முழுமையாக ஈடுபட்டு ஒரு முகமாக தவம் செய்ததை எண்ணி மகிழ்கிறேன். இந்த லிங்கத்தின் மீது உன் மனதை தியானம் செய்ததால், உன்னை ஜீவன் என உலகத்தார் அழைப்பார்’’ என்று அருளாசி வழங்கினார்.
“உன் குணங்களாலும், உன்னுடைய அனுக்கிரகத்தாலும் நீ இந்திரனுக்கு குருவாக விளங்குவாய்’’ என்ற வரமும் கொடுக்கிறேன் என்றார். உயர்ந்த பதவியான இந்திரபதவி கிடைக்க, சிவபெருமானின் அருள் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார் பிரகஸ்பதி. காசி காண்டத்திலும், இந்த நூல் விளங்குகின்றது. வசிஸ்டரின் அருள் ஆசியால் இந்திரலோகத்தில், தேவேந்திரன் சபைக்கு தேவ குருவாக விளங்கினார். புத்தியில் சிறந்தவர். இந்திரனுக்கு நன்மை புரிய வேண்டும் என்று நினைத்த தேவகுருவான பிரகஸ்பதி, சுக்கிர வேஷம் கொண்டு அசுரர்களுக்கு நாஸ்திகத்தை போதித்தார். இந்திரனுக்காக வேண்டிய தன் புத்திரனை சுக்கிர இடம் அனுப்பி, மிருத சஞ்சீவினி என்ற வித்தையைக் கற்க அனுப்பி வைத்தார்.
இந்திரன், தன்னை அலட்சியம் செய்த போது அவனைவிட்டு விலகினார். இந்திரனுக்கு, பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இதை கண்டறிந்த பிரகஸ்பதி, அஸ்வமேதயாகம் செய்து பிரம்மஹத்தி தோஷத்தை அகற்றினார். நசுசன் என்ற அரக்கன், இந்திராணியை மனைவியாக்க விரும்பினான். அவனின் துர்குணத்தை அறிந்து, புத்திசாலித்தனமாக அவளைக் காப்பாற்றினான். எவ்வாறு எனில், சப்தரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் வரும்படி அவளுக்கு ஆலோசனை கூறினார். அகஸ்தியர், நசுஷனை பாம்பாக்கினார்.
வஸுமநஸ் என்ற அரசனுக்கு, ராஜ தர்மத்தை உபதேசித்தார். உபசரி சரவஸுசு என்ற அரசனுக்கு யாகம் செய்துதான். தர்மராஜனுக்கு தர்மத்தையே உபதேசம் செய்தார். பூலோகத்தில் வசிக்கும் பல அரச குமாரர்களுக்கு, வேதத்தைக் கற்பித்தார். தவம் செய்து, நவக்கிரகங்களில் ஒருவரான அவர் குரு ஆனதால், அவரது நாளான வியாழன் குருவாரம் எனப்பட்டது. ஸ்ரீகாஞ்சி சச்சரத்தில், கயாரோகம் என்னும் கோயில் இவருடைய பெயரால் லிங்கமும், இவருடைய உருவமும் உள்ளது. வியாழ பகவான் திருச்செந்தூர் சேத்திரத்தில் தம்முடைய இயந்திரத்தை ஸ்தாபிதம் செய்தார்.
மகாபாரதத்தில் பிரகஸ்பதியின் சாபம்
இதிகாச காலத்தில், சடங்குகளும் யாகங்களும் அதிகமாக இடம்பெற்று இருந்தது. எனவே, அக்காலத்தில் பெண் என்பவள் ஆணின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தின் அங்கமாக பெற்றிருந்தாள். சடங்குகள் செய்யும் பொழுது, கணவன் அருகே மனைவியானவள் இருப்பது மிகமிக அவசியமாக இருந்தது. துணை இன்றி எதையும் செயல்படுத்த முடியாத நிலைநிலவியது. ஒரு பெண், தவறு செய்தால் தண்டிக்கப்படவில்லை. தவறிழைத்தாலும் ஒதுக்கப்படவில்லை. அன்றைய சூழல் சமுதாயத்தில் சம அந்தஸ்தை பெண் பெற்றிருந்தாள். ஆணின் அருகே பெண் இருந்தால், ஆன்மிகப் பரிபாலனம் சிறப்பாக அமையும் என நினைத்தனர். இதனால் பெண்ணை ஆண் மதிக்கும் சூழல் ஏற்பட்டது.
திங்களும் தாரையும்
பிரகஸ்பதியின் மனைவி தாரா, இல்லற வாழ்க்கையில் முழு திருப்தியை அடையவில்லை. அவள் ஒரு சமயம், வானை நோக்கி அண்ணாந்து பார்க்கின்ற பொழுது, சந்திரன் செல்வதை கவனித்தாள். அவன் இடத்தில் தன்னுடைய மனதை பறிகொடுத்தாள். ஆகவே, அவள் சந்திரலோகம் சென்று அடைந்தாள். அழகிய தேஜஸ் பொருந்திய அவனின் அழகைக் கண்டு, மனதைப் பறி கொடுத்தாள் தாரை. தாரை என்பதற்கு, நட்சத்திரம் என்பது பொருள்.
வானத்தில் நட்சத்திரமாக விளங்கிய தாரை, சந்திரனுடன் கலந்து இன்பமாக வாழ்ந்து வந்தாள். தாரா இல்லாததைக் கண்டு, பிரகஸ்பதி கவலையுற்றான். அவள், சந்திரனோடு இருக்கிறாள் என்பதை அறிந்து, அவளிடம் சென்று “நீ இங்கு இருப்பது சிறப்பல்ல, தேவ லோகத்தில் நான் செய்யும் சடங்குகளுக்கு நீ இல்லாமல் எப்படி முழுமை பெறும்? ஆகவே நீ என்னுடன் வா’’ என வற்புறுத்தினான் பிரகஸ்பதி.
ஆனால் அவளோ, என்னால் வர முடியாது என மறுத்துரைத்தாள். அருகில் இருந்த சந்திரனிடம், அவளை எப்படியாவது அனுப்பிவிடு என்று நல்லவிதமாக எடுத்துக் கூறினான் பிரகஸ்பதி. ஆனால், அவனும் “நானாக அவளை வரவழைக்கவில்லையே? அவளாகத்தான் வந்தாள்; எனக்கு அவளை நீ அழைத்துச் செல்வதில் எனக்கு ஒரு துன்பமும் இல்லை’’ என்று சந்திரன் கூறினான். அதைக் கேட்டு அவனால் ஒன்றும் செய்ய இயலாமல், பிரகஸ்பதி மீண்டும் தேவலோகம் வந்தான்.
தாராவை மறந்துவிடலாம் என எண்ணினாலும், பிரகஸ்பதியால் அது முடியவில்லை.பிரகஸ்பதி மீண்டும் இந்திரனிடம் சென்று, எப்படியாவது அழைத்து வந்துவிடு என்று அவனிடத்தில் விண்ணப்பம் செய்தான். சரி என்று ஒப்புக்கொண்டான், இந்திரன். தாராவிடம் சென்று குடும்ப அமைப்புக்குள் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு இருவரும் சேர்ந்து வாழ்ந்தால்தான் எந்த ஒரு சடங்கும் நடத்த இயலும் என இந்திரன் தன் சுயலாபத்தோடு தாராவிடம் பேசினான். இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சந்திரன், கேலியாக “கௌதம முனிவரின் மனைவியான அகலிகையை கொண்டாடிய நீ, இதற்கு சமரசத்திற்கு வருகின்றாயா?’’ என்று கேலி செய்தார்.
அதனால் சினம் அடைந்த இந்திரன், சந்திரனோடு போர் செய்தான். பிரம்மதேவன் தலையிட்டு போரை தடுத்து நிறுத்தினார். பிறகு தாராவை பார்த்து, “நீ பிரகஸ்பதியோடு செல்ல வேண்டும்’’ என்று கட்டளையிட்டார். அவளும் மீண்டும் பிரகஸ்பதி இடம் வந்து சேர்ந்தாள். நாட்கள் செல்ல, தாராவின் வயிற்றில் ஒரு குழந்தை வளர்ந்தது. தாரா, பிரம்மாவை நோக்கி, தான் தற்போது கர்ப்பவதியாக இருக்கிறேன் என்று கூறினாள். மேலும், இது யாருடைய குழந்தை என அறிய விரும்பினான் பிரகஸ்பதி. ஆனால், தாரா பதில் கூறவே இல்லை. அமைதியாக இருந்தாள்.
ஊர் மக்களும், தாராவின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு, யார் தகப்பன் என்பதை அறிய விரும்பினர். அதற்கும் அவள் பதில் உரைக்காமல், அமைதியாக இருந்தாள். அந்த சமயத்தில், ஒரு அதிசயம் நடந்தது. தாராவின் வயிற்றில் இருந்த குழந்தையானது, உண்மையில் நான் யாருடைய குழந்தை என்று கூறுங்கள் என்று கருவறையில் இருந்தே கேட்டது. குழந்தை கருவில் இருக்கும் பொழுதே தன் மூலத்தைக் கேட்கிறதே? இது புத்திசாலியாக இருக்கும் போலிருக்கிறது என்று அங்கே கூடியிருந்த மக்கள் பேசிக் கொண்டனர். ஆனால், அதற்கும் தாரா ஒரு பதிலும் சொல்லாமல், அமைதியாக இருந்தாள்.
அதைப் பார்த்த மக்கள், “தாரா, உன் வயிற்றில் இருக்கும் குழந்தை கேட்கிறது, அதற்கு நீ பதில் உரைக்காமல் இருக்க இயலாது’’ என்று கூறியதும், தயங்கித்தயங்கிக் குழந்தையிடம் “உன்னுடைய தந்தை சந்திரன்’’ என்று தாரா கூறியதும், கடும் சினம் கொண்டான் பிரகஸ்பதி.
பிரகஸ்பதி இட்ட சாபம்
உள்ளத்தில் அக்னி வேகம் குழம்பாக கொதிக்க, வயிற்றில் இருக்கும் குழந்தையை பார்த்து, “நீ ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் பிறப்பாய்’’ என சாபத்தை விட்டான். பிரகஸ்பதியின் சாபத்தை கேட்ட தாரா பதறினாள். தன்னுடைய குழந்தை நிலையை எண்ணி வருந்தினாள். சந்திரனின் குழந்தையாக புதன் பிறந்தான்.
அக்குழந்தைக்கு நல்ல அறிவுரை கூறியும், வேதங்களை கற்பித்தும், வளர்த்தாள். வளர்ந்ததும், அந்த குழந்தை, தன்னுடைய தாயைப் பார்த்து கேட்டது, “அம்மா நான் ஆணா அல்லது பெண்ணா? தர்மத்தைச் சார்ந்து நான் வாழ்வதா? அதர்மத்தைச் சார்ந்து வாழ்வதா? சன்னியாசியாக இருப்பதா? இல்லையென்றால் திருமணம் செய்து கொள்ளலாமா? அப்படி திருமணம் செய்து கொண்டால், நான் ஆணைத் திருமணம் செய்து கொள்வதா? பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதா?’’ என்று பற்பல கேள்விகளை கேட்டான்.
மகனின் இத்தகைய கேள்விகளைக் கேட்ட தாரா, அதிர்ந்தாள். “மகனே.. வேதனை படாதே. நீ அலிகிரகமாக (ரெண்டைத்தன்மையுடையது) இருந்தாலும், லா என்பவளை திருமணம் செய்து கொள்வாய். மக்கள் வாழ்க்கையில், புதன் திசை நடந்தால், உன்னை போற்றி புகழ்வர். உன் திசை நடக்கும் போது, இவர்களுக்கு பிரகாசமான வாழ்வு அமையும்’’ என்ற உண்மையை எடுத்து கூறினாள். பிரகஸ்பதியின் ஜோதிட விசேஷம், குற்றம் செய்பவர்களை, தவறு செய்பவர்களையும் போக்கி நல்குணத்தைத் தருவது குருவின் குணமாகும். இவருக்கு புதனும் சுக்கிரவனும் சத்ருக்கள். சூரியன் சந்திரன் அங்காரகன் ஆகிய இவர்கள் மித்திரர்கள் ஆவார்.
இவர். புருஷ கிரகணம் கேந்திர ஸ்தானத்தில் இருப்பதனால், லட்சக்கணக்கான தோஷங்களை பரிகாரம் செய்வார். புத்திர பாக்கியத்தையும், தனத்தையும் அள்ளிக் கொடுப்பவர். அதனால் புத்திரகாரன், தனகாரன் என்று போற்றப்படுபவர். இவர் கடக ராசியிலே உச்சமாகவும், மகர ராசியில் நீச்சமாகவும் இருப்பவர். இவர் லக்னம், ஜென்மத்திலிருந்து அந்த ஜாதகருடைய நற்குணம் தேஜஸ் தீர்க்க, ஆயுள் விர்த்தை, புத்திர பாக்கியம், தானம், அழகு முதலியவற்றில் சிறந்து உள்ளவனாக இருப்பான். குருதசை 16 வருஷம் பயனை தரும்.
பிருஹஸ்பதியின் மந்திரம்
ப்ருஹஸ்பதி மந்த்ரஸ்ய க்ருத்ஸமத மஹரிஷி:
ஜகதீ சந்த: ப்ருகஸ்பதி க்ரஹோ தேவதா
பிரகஸ்பதியின் கடாட்சியம் நிரம்பிய மந்திரத்தை படித்து பயன் பெறுவோம்!
பொன்முகரியன்
The post நவகிரகங்களில் பிரகஸ்பதியின் மகிமை appeared first on Dinakaran.