×
Saravana Stores

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட் ராங், கடந்த 5ம்தேதி உணவு டெலிவரி ஊழியர்கள் போல பைக்கில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என 11 பேரை, போலீசார் அன்று நள்ளிரவு கைது செய்தனர். இந்நிலையில், ஊத்துக்கோட்டையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட் ராங் படுகொலையை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வலியுறுத்தியும் ஊத்துக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் கவிபாரதி, பொருளாளர் நரசிம்மன், துணை தலைவர் சாந்தகுமார், இணை செயலாளர் சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், உண்மையான குற்றவாளிகள் இல்லை, உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நுழைவாயிலில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக, பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 70க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். சங்க தலைவர் எம்.சம்பத் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சேகர், சரண் ராஜ், மணிவர்மன், கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், இவ்வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரியும் கண்டன முழக்கமிட்டனர். மேலும், கும்மிடிப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வழக்கறிஞர்கள் யாரும் வழக்காடமாட்டார்கள் எனவும் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Oothukottai ,Kummidipoondi ,Bahujan Samaj Party ,president ,Armstrong Rong ,Perampur ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள 26 பேரும் அறிவுரை கழகத்தில் ஆஜர்