வீட்டின் முன்பு கட்டியிருந்த மாட்டை அடித்து கொன்ற சிறுத்தை மக்கள் பீதி; வனத்துறை எச்சரிக்கை

இடைப்பாடி: இடைப்பாடி அருகே, வீட்டின் முன்பு கட்டியிருந்த மாட்டை சிறுத்தை அடித்து இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து சிசிடிவி கேமராக்களை பொருத்தி, வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே பக்கநாடு ஊராட்சிக்குட்பட்ட ஆணைப்பள்ளம் கோம்பைக்காடு பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவர் 4 மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மாடுகளை தனது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்தார். நேற்று அதிகாலை அங்கு வந்த சிறுத்தை, ஒரு மாட்டை அடித்து கொன்றுள்ளது. பின்னர், அதனை சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்து சென்று, மாந்தோப்பு அருகே சாப்பிட்டு விட்டு, மீதியை அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளது. நேற்று காலையில் எழுந்து பார்த்த மாதையன், ஒரு மாட்டை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பின்னர், தனது மனைவி ஆராயியுடன் தேடி சென்றார். அப்போது, சற்று தொலைவில் மாந்தோப்பு பகுதியில் மாடு, சிறுத்தையால் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தது. மேலும், அதன் அருகில் சிறுத்தையின் கால் தடமும் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து இடைப்பாடி வருவாய் ஆய்வாளர் ஆனந்தபாபுவுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், வனச்சரக அலுவலர் சிவானந்தன், வனவர் ஜெயக்குமார், வனக்காப்பாளர்கள் சந்திரன், மதிவாணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு இறந்து கிடந்த மாட்டையும், அங்கிருந்த கால் தடங்களையும் பார்வையிட்டனர். பின்னர், தடயங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கோம்பைக்காடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் 13 சிசிடிவி கேமராக்களை பொருத்தி, வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், ‘பக்கநாடு ஊராட்சி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே, இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம். பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும். சிறுத்தை கடித்து குதறியதால் இறந்த மாட்டின் உடலை எடுக்காமல் அப்படியே விடப்பட்டுள்ளது. அதன் இறைச்சியை சாப்பிடுவதற்கு, மீண்டும் சிறுத்தை அங்கு வரும் என்பதால், அந்த இடம் உள்பட குண்டத்துமலை கரடு பகுதியில் 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

 

The post வீட்டின் முன்பு கட்டியிருந்த மாட்டை அடித்து கொன்ற சிறுத்தை மக்கள் பீதி; வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: