தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு வேளையில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் திருமயம் (புதுக்கோட்டை) 90 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. அதேபோல பொன்னேரி (திருவள்ளூர்) 80 மிமீ மற்றும் செங்குன்றம், ஆவடி, மின்னல், மண்டலம் 03 புழல், திருக்கழுக்குன்றம், கத்திவாக்கம், ராணிப்பேட்டை பகுதிகளில் தலா 70 மிமீ மழை பெய்துள்ளது.

இது தவிர வேலூர், சிவகங்கை, புதுக்கோட்டை என பல பகுதிகளில் கணிசமாக மழை பெய்துள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 39.7° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக ஈரோட்டில் 20.0° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வானிலை: வரும் நாட்களில் நிலவும் வானிலை தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 12 மற்றும் 13 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர் தேனி, திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 14 முதல் 17 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 – 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 – 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: