வாழ்வையே அழகாக்கும் அழகிய நாமம்

ஸர்வாபரண பூஷிதா

இந்த நாமத்திற்கு முன்பு அநவத்யாங்கீ, சர்வாருணா, மஹாலாவண்ய ஸேவதி என்று பார்த்துக்கொண்டே வந்தோம். இப்போது ஸர்வாபரண பூஷிதா என்கிற நாமத்தை பார்க்கப் போகிறோம். இந்த நாமத்திற்கான பொருள் மிகவும் எளிதானது. சகல நகைகளாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவள் அல்லது சகல ஆபரணங்களையும் தரித்தபடி பேரழகோடு இருப்பவள் என்று பொருள். இது வெளிப்படையான அர்த்தம். ஆனாலும், இந்த வெளிப்படையான அர்த்தமே கூட முக்கியத்துவம் வாய்ந்தது.

நாம் மஹாலாவண்ய ஸேவதி என்கிற நாமத்திலிருந்து பார்க்கக்கூடிய நாமங்கள் அனைத்துமே, அதாவது சர்வாருணா அநவத்யாங்கீ என்கிற நாமங்கள் அம்பிகையை சமஷ்டியாக அதாவது அம்பிகையின் பேரழகை தொகுத்ததுபோல் வர்ணிக்கப்பட்டிருந்தது. ஏனெனில், அதற்கு முன்பு கேசம் முதல் பாதம் வரை தனித்தனியாக ஒவ்வொரு அங்கமாக சொல்லியபடியே வந்து, மேலேயுள்ள நாமங்கள் அனைத்தும் சமஷ்டியாக அம்பிகையின் மொத்த ரூபத்தையும் சொல்கிறது. அதில், மஹாலாவண்ய ஸேவதி என்று சொல்லும்போது வடிவழகையும், ஸர்வாருணா என்று சொல்லும்போது நிறத்தின் அழகையும், அநவத்யாங்கீ என்று சொல்லும்போது அங்கங்களின் அழகையும் சர்வாபரண பூஷிதா என்று சொல்லும்போது ஆபரணங்களினுடைய அழகு வர்ணிக்கப்படுகின்றது. இந்த நான்கு நாமங்களில் வடிவழகு, நிறத்தழகு, அங்கங்களின் அழகு, ஆபரணங்களின் அழகு என்று இந்த நான்குமே சமஷ்டியான (தொகுத்தது போன்ற) ஒரு அழகுதான். ஆனால், அந்த வர்ணனைக்குள்ளும் இன்னொரு விஷயத்தையும் முக்கியமாகச் சொல்கிறது.

இந்த நான்கு நாமங்களில் மஹாலாவண்ய ஸேவதியும், சர்வாருணா என்கிற நாமங்களும் ருதஹம் சத்யம், கிருஷ்ண பிங்களம் என்பதை பார்த்துவிட்டு அதற்குப் பிறகு அநவத்யாங்கீ என்று வரும்போது எல்லாவற்றையும் தனது அங்கங்களாக கொண்டவள் என்று பார்த்துவிட்டு, இதன் மூலம் சர்வ அந்தர்யாமியாக சர்வ வியாபியாக அதாவது எல்லாவற்றிற்குள்ளும் இருக்கிறாள் என்று பார்த்துவிட்டு இப்போது சர்வாபரண பூஷிதாவிற்கு வந்திருக்கிறோம்.
அது சரி, சர்வாபரண பூஷிதா என்று இந்த பெயர் இவ்வளவு வெளிப்படையான அர்த்தமாக இருக்கிறதே. இதற்கு உள்ளே என்ன அர்த்தம் இருக்கப்போகிறது என்று தோன்றும்.

இதற்கு முந்தைய நாமமான அநவத்யாங்கீ என்று சொல்லும்போது குறைகளற்ற அங்கங்கள் உடையவள் எனில், எல்லாவற்றையும் அவள் அங்கங்களாக உடையதால் அது குறைகளற்ற நிலையில் இருக்கிறது. லௌகீகமாக இந்தப் பிரபஞ்சத்தைப் பார்க்கும்போது, அதில் இருக்கக் கூடிய குறைகள் நமக்குத் தெரிகிறது. ஆனால், அதே சமயம் அத்யாத்மமாக இது எல்லாமே அவளுடைய அங்கங்கள் என்று பார்க்க ஆரம்பித்ததற்குப் பிறகு, அதில் நமக்கு குறைகளே தெரிவதில்லை. அப்போது, அநவத்யாங்கீ என்பது என்னவென்று நமக்கு புரிகின்றது. ஆனால், இந்த இடத்தில் சர்வாபரண பூஷிதா என்று சொல்லும்போது நாம் இந்த ஆபரணம் என்கிற வார்த்தையைக் கவனிக்க வேண்டும்.

ஆபரணம் என்றால் நாம் அணிந்து கொள்ளக்கூடிய அலங்காரப் பொருட்கள், நகைகள் என்று அர்த்தம் பெறும். ஆனால், நாம் இங்கு ஆபரணம் என்கிற வார்த்தையை கவனித்துப் பார்த்தால், பரணம் என்றால் தாங்கப்படுவது என்று அர்த்தம். ஒரு ராஜாவை சொல்லும்போது இந்த ராஜா ராஜ்ஜியத்தை பரணம் பண்ணுகிறார் என்று சொல்கிறோம். அதாவது அந்த ராஜ்ஜியத்தை அவர் தாங்குகிறார். இப்போது ஆபரணம் என்றால் எது தாங்கப்படுகிறதோ அதற்குத்தான் ஆபரணம் என்று பெயர். உதாரணமாக நாம் நகையை போட்டுக்கொண்டால் இந்த சரீரம் இந்த நகையை தாங்குகிறது. அதனால, தாங்கப்படுவதற்கு ஆபரணம் என்று பெயர். எந்த நகையாக இருந்தாலும் சரிதான் இந்த சரீரம்தான் அதை தாங்கப்போகிறது. இங்கு ஆபரணம் என்று மட்டும் சொல்லவில்லை. சர்வாபரணம். இதற்கும் அடுத்து பூஷிதா.

இப்போது சர்வத்தையும் ஆபரணமாக யார் கொண்டிருக்கிறாளோ, எல்லாமே அவளால் தாங்கப்படுகின்றது. உதாரணமாக நாம் ஏதோ ஒரு பொருளை தாங்கிக் கொண்டிருந்தோமெனில், கொஞ்ச நேரத்தில் நமக்கு மிகவும் கஷ்டமாகிவிடும். அம்பிகை ருதஹம் சத்யம் பரம் பிரம்மம் புருஷன் கிருஷ்ண பிங்களம் என்று வேத வாக்கியத்தின்படி பார்க்கும்போது சத்தியமாகவும், இந்த சிருஷ்டியின் ஒரு ஒழுங்குத் தன்மையோடு இருக்கிறாள். அங்கங்களோடு குறைகளற்று இருக்கிறாள்… என்று பார்ப்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இப்படி சிருஷ்டியை படைத்து எல்லாம் செய்யும் அம்பிகை அதைக் காப்பாற்ற வேண்டுமல்லவா… அப்படி காப்பாற்றுதல் என்கிற தாங்குதலையும் அவளேதான் செய்கிறாள். இந்த சிருஷ்டியை மட்டுமல்ல. எல்லாவற்றையும் அவளே தாங்குகிறாள். தாங்குதல் என்கிற காரியத்தைச் செய்வதால் அவள் எந்தவகையிலேயும் சலிப்படையாமல் அந்த தாங்குதல் எந்த விதத்திலேயும் அவளுக்கு கஷ்டமாக இல்லாமல், அதை வந்து தனக்கொரு அலங்காரமாக, இங்கு பூஷிதா என்றால் அலங்கரித்துக் கொள்ளுதல் என்று பொருள். இங்கு எல்லாவற்றையும் தன்னுடைய ஆபரணங்களாக தாங்கினாலும், அதனால் பாதிப்படையாமல் அதை ஒரு அலங்கார வஸ்துவாக மட்டுமே வைத்துக் கொண்டு அதனால் பாதிப்படையாமல், இருக்கிறாள். Untouched by that. எல்லாமே அவளுடைய தாங்குதலின் பேரில்தான் நடக்கின்றது. But, she is untouched. தொடப்பட முடியாத வஸ்துவாகவும் இருக்கிறது. எதுவுமே அவளைப் பாதிப்பது கிடையாது.

மீண்டும் ஒருமுறை பார்ப்போம். எல்லாமே தாங்குபவள் அவள்தான். அதில் சந்தேகமே கிடையாது. அந்த தாங்குதலால் அவளுக்கு ஏதாவது பாதிப்போ ஒரு விஹாரமோ ஏதேனும் மாற்றமோ நிகழ்கிறதா எனில் எந்த மாற்றமும் எந்த விகாரமும் எந்த பாதிப்பும் நிகழவில்லை. அவள் அதை ஒரு அலங்காரமாக சந்தோஷமாக செய்து கொண்டிருக்கிறாள். இந்த சிருஷ்டியை தாங்குவது என்பது அம்பிகைக்கு கஷ்டமான செயல் கிடையாது. இதை வந்து லீலா மாத்திரமாக, ஒரு விளையாட்டைப்போல செய்து கொண்டிருக்கிறாள். அதனால் அவள் எந்த பாதிப்பும் அடையாமலும் இருக்கிறாள். அதனால்தான் பிரம்மம் நிர்விகாரமானது என்கிறார்கள். நிர்விகார வஸ்து என்று சொல்கிறோம்.

ஒட்டு மொத்த சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோதாணம் என்கிற மறைப்பாகவும், அனுக்கிரகமாகவும் செய்வது என்று எல்லாவற்றையும் செய்தாலும் அதனால் இந்த பிரம்ம வஸ்து மாற்றம் அடையாமல் இருக்கிறது. இப்படி எல்லாவற்றையும் செய்தபடியே தாங்கிக் கொண்டிருப்பதே அவளுக்கு ஆபரணமாக அழகாக இருக்கிறது. அவள்மேல் உள்ள அனைத்துமே அழகாகி விடுகின்றது. கடல், மலை, ஆறு, காடு, வானம், சூரியன், சந்திரன் என்று எல்லாவற்றையும் அவளே தாங்குகிறாள். எனவே, அதன் மேல் உள்ளவை அவளுக்குச் சுமையல்ல. ஆபரணங்கள் போல் அழகானது. எனவே, இவை அனைத்தும் அவளுடைய அருளை அழகுப்படுத்தவே உள்ளன.

கீதையில் ஒரு இடத்தில் பகவான் அர்ஜுனனுக்குச் சொல்லும்போது, நான் என்னுடைய நிர்விகார நிலையில் செயல் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. ஆனாலும், தொடர்ந்து எந்தவிதமான இடைவெளியுமற்று செயல்களை செய்து கொண்டே இருக்கின்றேன். அதே நேரத்தில் அந்த செயல்களால் தொடப்பட முடியாத நிலையிலும் இருக்கிறேன் என்கிறார், ஓரிடத்தில். கர்மம் அகர்மம் என்று இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வது. சிருஷ்டி முதலான செயல்களை செய்து கொண்டே இருப்பது கர்மம். அதேநேரத்தில் அதனால் பாதிக்கப்படாமல், செயலற்ற நிலையில் இருப்பது அகர்மம். இது இரண்டும் பிரம்மத்திடம் ஒரே நேரத்தில் இருக்கிறது. பிரம்மம் செயலற்ற நிலையில் அகர்ம நிலையில்தானிருக்கிறது. ஆனால், சிருஷ்டி முதலான கர்மாக்கள் தன்னால் நடக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் பிரம்மத்தினுடைய சாந்நித்தியத்தினால் நடக்கின்றது. அம்பிகை கர்ம நிலையில் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருக்கிறாள். அதே நேரத்தில் எதனாலும் பாதிப்படையாமல் அகர்ம நிலையிலும் இருக்கிறாள். இது ஈஸ்வர லீலை. அவனைப்போல் கர்மா செய்யவே முடியாத நிலையிலும் இருக்கிறானே, வேடிக்கையாக ஒரு விஷயம் சொல்லுவார்கள். ஈஸ்வரன் மாதிரி சம்ஸாரி யாரும் கிடையாது. நிர்குணமன பிரம்ம வஸ்து அதனுடைய ஸ்வபாவம். ஈஸ்வராதி நிலையில் தொடர்ச்சியான செயலான கர்மத்தைச் செய்கிறது.

இப்படியாக அம்பிகை எல்லாவற்றையும் தாங்குபவளாகவும் அதே நேரத்தில் இது ஒரு பூஷணமாக, அதை வந்து ஒரு கஷ்டப்பட்டு செய்யக்கூடிய விஷயமாகச் செய்யாமல் விளையாட்டாக தனக்கு ஒரு அலங்காரமாக அதை ஏற்றுக்கொண்டாள். இந்த ஒட்டுமொத்த சிருஷ்டியும் அம்பாளுடைய ஆபரணங்கள். அம்பிகைக்கு செய்யக் கூடிய அலங்காரங்கள். அதனால்தான், இது மொத்தமும் அம்பிகையினுடைய ஆபரணங்களாக அலங்காரங்களாக இருப்பதனால்தான் சந்திரன் இல்லாதபோது கூட தன்னுடைய தாடங்கம் என்கிற ஆபரணத்தை தூக்கிப் போட்டு சந்திரனை வரவழைக்க முடிந்தது. நினைவுக்கு வருகிறதா திருக்கடையூர் அபிராமி அம்மை அபிராம பட்டர் வாக்குக்கு இணங்கி அமாவாசையை பௌர்ணமி நிலவாக வானத்தில் மாற்றிக் காட்டினாளே. இப்போது புரிகின்றதா. ஏனெனில், நிலவும் கூட அவளுக்கு ஒரு ஆபரணம். அதைத் தாங்கிக் கொண்டபடி அவளே ரசிக்கவும் அழகும் சேர்க்கிறாள். சூர்ய சந்திராதி வஸ்துக்கள் எல்லாமே அவளுக்கு ஆபரணம். அவளுடைய ஆபரணத்தை தூக்கிப் போட்டால் அது சூர்யனாகவும் சந்திரனாகவும் நட்சத்திரங்களாகவும் மாறுவதில் அவளைப் பொறுத்தளவில் அது அநாயசமானது.

ஒருமுறை ஜே.கிருஷ்ணமூர்த்தி மும்பையில் காலை நேரத்தில் கடற்கரைக்குச் சென்றார்., எல்லோரும் பின்னாலேயே வந்தார்கள். பக்கத்தில் ஒருவர் இவரென்ன கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறாரே, தினம் தினம் பார்ப்பது தானே என்று அவருக்கு அருகே நின்றார். கடலின் கீழேயிருந்து வானத்தின் மீது செக்கச் சிவந்த சூரியன் தகதகவென்று சூரியன் ஆயிரம் கிரணங்களோடு மேலேறிக் கொண்டிருந்தான். அருகே உள்ளவரை நோக்கி ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆங்கிலத்தில், ‘‘ Can you help it” என்று கேட்டார். அவ்வளவுதான் அருகேயிருப்பவர் அமைதியானார். அன்றுதான் முதன் முதலில் சூரியனை பார்த்ததுபோன்று இருந்தது அவருக்கு.

அது அந்த வஸ்துவினுடையது. அழகானது. ஆபரணம் போன்று இருக்கிறது. அதை நாம் வெறுமே பார்க்க வேண்டும். இதுபோல… இதுபோல… நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையுமே பார்க்கப்பார்க்க அனைத்தும் அம்பிகையின் ஆபரணமாகவே தெரியும்.

பாபாவினுடைய அஷ்டோத்திரத்தில் ஒரு நாமம் வரும். அகர்மானேக கர்ம சுகர்மினே நமஹ… இந்த நாமத்தினுடைய அர்த்தமானது, அகர்ம அநேக கர்ம சுகர்மினே நமஹ என்பதாகும். சுவாமி நீங்கள் அகர்ம நிலையில் இருக்கிறீர்கள். பிரம்ம வஸ்துவாக நிர்குணமாக இருக்கும்போது அகர்ம நிலையில் இருக்கிறீர்கள். ஆனால், அகர்ம அநேக கர்ம… என்கிற வார்த்தையை பாருங்கள். நீங்களே ஜகத்தை சிருஷ்டி, பரிபாலனம் செய்யும்போது அநேக கர்மங்கள் செய்கிறீர்கள். இதெல்லாம் எதற்கு செய்கிறீர்கள் எனில் சுகர்மினே நமஹ… அதாவது பக்தர்களாகிய எங்களுக்கு நல்லது செய்வதற்காக வேண்டியே அப்படிச் செய்கிறீர்கள்.

இன்னொரு கோணத்தில் அகர்ம நிலையில் பிரம்மம் இருந்தாலும், இந்த ஜீவாத்மாக்களுக்கு சொத்சொரூபம் என்கிற மோட்ச நிலையை காண்பிப்பதற்காக அநேக கர்மங்களை, சுகர்மம் என்று செயலைச் செய்கிறது. அது
கருணையால் அப்படிச் செய்கிறது என்று புரிந்து கொள்ளவேண்டும். இப்போது அந்தக் கருணையே இங்கு ஆபரணமாகவும் இருக்கிறது. இங்கு இருக்கும் கடல், வானம், நதி, ஆறு, மலைகள், காடு, பள்ளத்தாக்கு, நெருப்பு… என்று எல்லாமுமே கருணையின் வடிவமாகும்.

பகவான் ஸ்ரீரமண மஹரிஷியிடம் யாரேனும் சென்று ஏதேனும் பிரச்னையை சொல்லும்போது, பகவான், ‘‘நீ ரயில் வண்டியல ஏறின உடனே உன் தலையில இருக்கற சுமையை ரயில்ல வச்சுடற இல்லையா. ரயில்ல உட்கார்ந்துண்ட அப்புறமும் நீ அதை தலையில சுமக்கறயா என்ன? ரயில்ல இறக்கி வச்சுடற இல்லையா. இனி ரயில்தானே சுமந்துண்டு போகப்போறது. ஏன்,உன் சரீரத்தை கூட அந்த ரயில்தானே சுமக்கிறது. அதுபோல எல்லாவற்றையும் பகவான்தான் தாங்குறார்னு சுமையை உன் தலையில ஏத்திக்காத’’ என்று பேருபதேசம் அருள்வார்.

மேலும், இன்னொரு உதாரணத்திற்கு கூட ரமண பகவான், ‘‘கோபுரம் தாங்கி பொம்மைகளை காண்பிப்பார். கோபுரமே தன்னைத்தானே தாங்கிண்டு நின்னுண்டு இருக்கறச்சே.. இந்த பொம்மைகள் தான் தான் கோபுரத்தை தாங்கறோம்னு நினைச்சுண்டிருக்கு’’ என்றும் அருளியிருக்கிறார்.

இப்போது மீண்டும் நாமத்திற்கு வருவோம். பொதுவாக நாம் ஒருவர் ஆபரணங்கள் அணிந்து கொண்டிருப்பதால் அழகு என்று சொல்வோம். ஆபரணம் அணிந்திருப்பவர் அழகாகத் தெரிவார். ஆனால், இங்கு, ஆபரணங்கள் அணிந்து கொண்டிருப்பதால் அம்பிகை அழகாக தெரியலை. அம்பிகைதான் அழகு.

லலிதாதான் அழகு. அந்த அம்பிகையான லலிதை அணிந்து கொண்டதால் இந்த ஆபரணங்கள் அழகாக தெரிகிறது. அந்த லலிதை என்கிற பேரழகின் தெறிப்பில் ஆபரணங்களும் ஜொலிக்கின்றன. நீங்கள் வானத்தையும் நட்சத்திரத்தையும் கடலையும் காடுகளையும் மலைகளையும் அருவிகளையும் ஏன் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையைப் பாருங்கள். எப்படி தாங்கிக் கொண்டிருக்கிறாள். அதுவே ஆபரணங்களாக உள்ளது என்பதை வார்த்தையால் விளக்க முடியாது. நாம் பார்க்க வேண்டும். வெறுமே பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது அந்த ஆபரணங்களை பார்க்கும்போது அதை அணிந்திருக்கும் அம்பிகை அதற்குப் பின்னாலிருந்து மெல்ல எழுந்து தரிசனம் தருவாள். எனவே, இந்த நாமத்தை நாம் நன்கு உள்வாங்கிக் கொண்டால், உங்களால் ஒருபோதும் சூரியனை வெறும் சூரியனாக பார்க்க முடியாது. அது அம்பாளின் வைர அட்டிகையாகவே தோன்றும். நட்சத்திரங்கள் அனைத்துமே ரத்தினங்களாக ஜொலிக்கின்றன.

இந்த நாமத்திற்குள் உள்ளார்ந்த செய்தி ஒன்று உள்ளது. அதாவது உங்களால் தாங்க முடியாத பிரச்னை என்று ஒன்றை அம்பிகையால் தரவே முடியாது. ஏனெனில், உங்கள் வாழ்வை அவளே தாங்குகிறாள். அப்படி அவள்தான் தாங்குகிறாள் என்கிறபோது, அந்தவொரு ஞானமோ அல்லது குறைந்த அளவு மன முதிர்ச்சியோ கூட (maturity) வரவர, நம் பாரத்தை நாம் மெல்ல மெல்ல இறக்கி வைத்து விடுவோம். ஏனெனில், தாங்குபவள் அவளே. அப்படித் தாங்குவதில்தான் அவளின் அழகே உள்ளது. பூபாரம் என்பதை அவள்தான் சுமக்கிறாள்.

விஷ்ணு சகஸ்ரநாமத்தில் கூட,
விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்யா பவத்ப்ரபுஹ் |
பூதக்ரித் பூதபிரித் பாவோ பூதாத்மா பூதபாவனஹ் ||

பூதக்ரித்தும் அவன் தான். பூதபிரித்தும் அவன் தான். இதையெல்லாம் உண்டாக்குபவனும் அவன்தான். இதையெல்லாம் தாங்குபவனும் அவன்தான். இப்படி சர்வாபரண பூஷிதையாக அம்பிகையே இருக்கிறாள். இந்த பிரபஞ்ச அழகை பார்க்க கற்றுக்கொண்டால், அந்த ஆபரணங்களை தன் மீது தரித்திருக்கும் அம்பிகை தானே தரிசனம் தருவாள். அதற்கு தீவிரமான ஏக்கம் மட்டுமே வேண்டும்.

இந்த நாமத்திற்கான கோயிலாக நாம் திருமீயச்சூர் லலிதையாம்பிகையைத் தவிர வேறெந்த தலத்தை சொல்ல முடியும். இப்பேர்ப்பட்ட அழகின் அல்ல… பேரழகுப் பெட்டகமாக லலிதையே இருக்கிறாள். எனவே, இந்த நாமத்தைச் சொல்லியபடியே லலிதா திரிபுரசுந்தரியை வணங்கி வாருங்கள். திருக்கடையூர் அபிராமியே இந்த நாமத்திற்கான தலமும் ஆகும். மகாவிஷ்ணுவானவர் அமிர்தகடேஸ்வரரை வணங்க வந்திருந்தார். மேலும். வித்யா மந்திர சாஸ்திரப்படி ஷட்கூட மந்திரத்தை ஜபித்தார். விஷ்ணுவானவர் தான் அணிந்திருந்த அனைத்து ஆபரணங்களையும் பீடத்தின் மீது வைத்தபடியும் ஜபித்துக்கொண்டிருந்தபோது சட்டென்று அந்த ஆபரணங்களிலிருந்து அபிராமி ஆவிர்பவித்தாள்.
இதுமட்டுமல்லாது அம்பாள் தன் தாடங்கத்தை வானில் எறிய அதுவே பௌர்ணமி நிலவாக ஜொலித்தது.
(சுழலும்)

The post வாழ்வையே அழகாக்கும் அழகிய நாமம் appeared first on Dinakaran.

Related Stories: