- கோயம்புத்தூர்
- மக்கள் குறைதீர் கூட்டம்
- கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர்
- நிர்வாகிகள்
- விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம்
- கோயம்புத்தூர்-
- திருப்பூர் மாவட்டம்
- தின மலர்
கோவை, ஜூலை 9: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், கோவை- திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி மாதம் கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தொழிலாளர் நல கூடுதல் கமிஷனர் ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், சோமனூர் ரகத்திற்கு 60 சதவீத கூலி உயர்வு பெற்றுத்தரக் கோரி சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உதிரி பாகங்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உடனடியாக ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி புதிய கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். கோவை சோமையம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அளித்த மனுவில், கோவை ரயில் நிலையத்தில் இருந்து கல்வீரம்பாளையம் மற்றும் மருதமலையில் இருந்து கணுவாய், சரவணம்பட்டி, காளப்பட்டி வழியாக 2 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
தற்போது, அந்த பஸ் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இரண்டு பஸ்களையும் உடனடியாக இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி சாதிய ஆவணப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
மேலும், கோவையில் செயல்படும் பிரபல செல்போன் விற்பனை நிறுவனத்தில் இருந்து சிறு செல்போன் கடை விற்பனையாளர்கள் வாங்கிய செல்போன்கள் திருட்டு போன்கள் என கூறி வாடிக்கையாளர்களை அந்த நிறுவனத்தினர் மிரட்டுவதாக கூறியும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செல்போன் விற்பனையாளர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
The post விசைத்தறி உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.