மாமல்லபுரம் அருகே எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மின் கம்பம்: உடனே அகற்ற கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் ஊராட்சியில் மக்கள் வசிக்கும் பகுதி, ஏரிக்கரை, விவசாய நிலங்களில் மின்சாரத் துறை மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பங்கள் நடப்பட்டன. இந்த மின் கம்பங்களை மானாம்பதி மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முறையாக பராமரிக்காமல் விட்டதால் சில கம்பங்கள் சாய்ந்தும், விரிசல் ஏற்பட்டும், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தும் எலும்பு கூடுபோல் காட்சியளிக்கின்றன.

விவசாய நிலங்களில் உள்ள மின் கம்பங்களில் செல்லும் மின் வயர்கள் கையில் எட்டிப் பிடிக்கும் அளவுக்கு தாழ்ந்துள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் இருந்து ஆண்டிக்குப்பம் செல்லும் சாலையையொட்டி மின்கம்பம் ஒன்று சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, உடைந்து சாலையில் விழுந்து உயிர்ச் சேதம் ஏற்படும் அபாய நிலையில் இருந்தது.

இதனையடுத்து, மானாம்பதி மின் வாரிய ஊழியர்கள் பல மாதங்களுக்கு முன்பு சேதமடைந்த கம்பத்திற்கு அருகே ஒரு புதிய கம்பத்தை அமைத்தனர். ஆனால், பல மாதங்கள் கடந்தும் எலும்புக்கூடு போல் காட்சியளிக்கும் பழைய மின் கம்பத்தை அப்புறப்படுத்தாமல் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். அலட்சிய போக்கை கைவிட்டு விபத்து ஏற்படுவதற்கு முன் பழைய மின் கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் அருகே எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மின் கம்பம்: உடனே அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: