தலைவர்கள், வேட்பாளர்கள் வீதிவீதியாக ஓட்டு வேட்டை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற உத்தரவு

* நாளை மறுநாள் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது. 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இன்று பிரசாரம் முடியும் நிலையில் மாலை 6 மணிக்குள் வெளியூரில் இருந்த வந்த அரசியல் கட்சியினர், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்களை வெளியேற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் 14ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளராக அன்னியூர்சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா மற்றும் சுயேச்சைகள் உள்பட 56 பேர், 64 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். மனுக்கள் பரிசீலனையில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. யாரும் வாபஸ் பெறாததால் 29 பேர் போட்டியிடுவதாக இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் கட்சி தலைவர்களின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடந்து வந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளான விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர். பாமக வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ், அன்புமணி, சவுமியா அன்புமணி, பாஜ தலைவர் அண்ணாமலை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நடிகர் சரத்குமார் உள்ளிட்டவர்களும் பிரசாரம் மேற்கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், வீடியோ வெளியிட்டு விக்கிரவாண்டியில் மிகப்பெரிய வெற்றியை தேடி தரவும், சமூகநீதியை நிலைநாட்டிடவும் வேண்டுமென பொதுமக்கள், திமுக தொண்டர்களிடம் கேட்டுகொண்டார். இதனிடையே நேற்று திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இன்று மாலை 5 மணியளவில் இறுதிகட்ட பிரசாரத்தை விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் நிறைவு செய்கிறார்.

அதேபோல், பாமக வேட்பாளர் அன்புமணி, சூரப்பட்டு, வாழ்ப்பட்டு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு கெடாரில் இறுதி கட்ட பிரசாரத்தை முடிக்கிறார். இன்றுடன் பிரசாரம் ஓய்வதால் வேட்பாளர்கள், தலைவர்கள் வீதிவீதியாக இறுதி கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  இன்று மாலை பிரசாரம் ஓய்கிற நிலையில் மாலை 6 மணிக்குள் வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள், அரசியல் கட்சியினர், தொகுதிக்கு சம்பந்தமில்லாத அனைவரையும் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள், திருமண மண்டபங்களை சோதனை செய்து உறுதிசெய்யவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 29 பேர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்த தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தேர்தல் அலுவலகத்தில் தபால் வாக்கு செலுத்தி உள்ளனர்.

இதேபோல், 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த விருப்பப்பட்டவர்களிடம் தபால் வாக்குகள் வீடு, வீடாக சென்று சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டுள்ளது. பதற்றமான, மிகபதற்றமான 44 வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நுண்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் நாளை மறுதினம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் எஸ்பி தீபக்சிவாச் தலைமையில் துணை ராணுவம் உள்ளிட்ட 1,200 போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

* வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

* 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

* 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 29 பேர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க உள்ளனர்.

The post தலைவர்கள், வேட்பாளர்கள் வீதிவீதியாக ஓட்டு வேட்டை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: