விடுபட்ட பகுதிகளில் விரைவில் பாதாளசாக்கடை திட்டம்: சேர்மன் முத்துத்துரை தகவல்

காரைக்குடி, ஜூலை 4: காரைக்குடி நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ரூ.33.71 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் விரைவில் இதற்கான பணிகள் துவங்கப்படும் என நகராட்சி சேர்மன் எஸ்.முத்துத்துரை தெரிவித்தார்.

காரைக்குடி நகராட்சி பகுதியில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட பாதாள சாக்கட்டை திட்டத்தில் விடுபட்டுள்ள பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆணையர் வீரமுத்துக்குமார் தலைமை வகித்தார். சேர்மன் எஸ்.முத்துத்துரை துவக்கி வைத்து பேசுகையில், காரைக்குடி நகராட்சி பகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கல்வி நகரான இப்பகுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சியாக அறிவித்துள்ளார்.

தற்போது அதற்கான அனைத்து பூர்வாங்க பணிகளும் நடந்து வருகிறது. மாநகராட்சியாக அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கேஆர்.பெரியகருப்பன், கேஎன்.நேரு ஆகியோருக்கு மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்த 140.13 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கழிவுநீர் சேகரிக்க 5559 ஆள்நுழைவு தொட்டிகள், 144.618 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. 31 ஆயிரத்து 725 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைக்கப்படும். கழிவுநீர் தேவகோட்டை ரஸ்தா சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. முதல்கட்டமாக 7250 வீடுகள் இணைக்க ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளுக்கான இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே பணிகள் நடந்த ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடக்காமலும், சில இடங்களில் பைப்புகள் பதிகாமல் உள்ளது. இதனை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும். தவிர விடுபட்ட பகுதிகளில் இத் திட்டத்தை செயல்படுத்த ரூ.33.71 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான டென்டர் முடிந்து விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளது என்றார்.

நகராட்சி செயற்பொறியாளர் இசக்கிமுத்து, உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன், நகர்நல அலுவலர் டாக்டர் திவ்யா, பொறியாளர் செந்தில்குமார், தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஜீவலதா, உதவி செயற்பொறியாளர் பிரேமலதா, பாதாள சாக்கடை திட்டம் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விடுபட்ட பகுதிகளில் விரைவில் பாதாளசாக்கடை திட்டம்: சேர்மன் முத்துத்துரை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: