துணை சுகாதார நிலைய காலியிடங்களை நிரப்பக்கோரி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூன் 26: துணை சுகாதார நிலையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தூத்துக்குடியில் கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை பயிற்சி பெற்ற கிராம சுகாதார செவிலியர்களை கொண்டு நிரப்ப வேண்டும். இணையதள பதிவேற்றம் செய்யும் பணியில் இருந்து கிராம சுகாதார செவிலியர்களை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும். கூகுள் சீட், எக்செல் சீட் முறையை ரத்து செய்து மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான அறிக்கையை பெற்றிட வேண்டும். மாவட்ட அளவில் காணொலி கூட்டம் நடத்துவதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை கிராம, பகுதி மற்றும் சமுதாய செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூட்டு நடவடிக்கை குழு மாவட்ட தலைவர் பொன் சாந்தகுமாரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் பவுல் ஆக்னஸ், வேல்சுதா, பொன்சாந்தி மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

The post துணை சுகாதார நிலைய காலியிடங்களை நிரப்பக்கோரி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: