இந்நிலையில் சென்னை மாதவரத்தை சேர்ந்த கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்கள் பன்சிலால் (40), கவுதம் (40) ஆகியோர் சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், கவுதம் கூறும்போது, ‘மாதேஷ், தின்னர் பயன்பாட்டுக்காக மெத்தனால் தேவைப்படுகிறது எனக்கூறி பில் கொடுத்து மெத்தனால் கேட்டிருந்தார். அவருக்கு 17 பேரல்களில் மெத்தனால் அனுப்பி வைத்தேன். ஒரு பேரல் 190 கிலோ எடை கொண்டது. அது போலி பில் என்பது தற்போதுதான் எனக்கு தெரியவந்தது’ என தெரிவித்தார்.
மற்றொரு கெமிக்கல் கம்பெனி உரிமையாளர் பன்சிலால் கூறும்போது, ‘மாதேசுக்கு 2 பேரல் மெத்தனாலை விற்பனை செய்தேன். ஒரு பேரல் 190 கிலோ மெத்தனால் அடங்கியது’ என்றார். இருவரிடமும் 19 பேரல்களில் (3610 கிலோ) மெத்தனால் வாங்கிய மாதேஷ் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ேஜாசப்ராஜா என்பவருக்கு கைமாற்றி விட்டிருந்தார். ஜோசப்ராஜா, மாதவச்சேரியை சேர்ந்த பிரபல சாராய வியாபாரியான சின்னதுரைக்கு வழங்கி உள்ளார். அவர் மெத்தனாலை சாராய வியாபாரிகளுக்கு வழங்கி உள்ளார்.
நெட்வொர்க் அமைத்து வழங்கிய மெத்தனாலை பயன்படுத்தி பெரிய அளவில் சாராயம் தயாரித்து இந்த கும்பல் விற்பனை செய்துள்ளது. இவர்களுக்கு மெத்தனால் இருப்பு வைப்பதற்கும், சாராயம் தயாரிக்கவும், பெரிய கேன்களில் இருந்து சிறிய கேன்களுக்கு மெத்தனாலை மாற்றவும் கள்ளக்குறிச்சி அடுத்த செம்படாக்குறிச்சியை சேர்ந்த அரிமுத்து, கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த தெய்வீகன் ஆகிய இருவரும் இடத்தை வாடகைக்கு வழங்கி உள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பகுதியில் சாராயம் தயாரிக்க பயன்படும் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மெத்தனாலையும் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
* மினி லாரிகளில் மெத்தனால்
சென்னை கெமிக்கல் கம்பெனிகளில் இருந்து மாதேஷ், தின்னர் எனக் கூறி மினிலாரிகளில் மெத்தனால் எடுத்து வந்து பின்னர் அவற்றை சாராய வியாபாரிகளுக்கு அனுப்பி உள்ளார். பேரல்களில் எடுத்து வந்த மெத்தனாலை தனியாக எடுத்து லாரி டியூப்களில் அடைத்து அவற்றை பூமிக்கடியில் புதைத்து வைத்துள்ளனர். அவ்வாறு புதைக்கப்பட்டிருந்த 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 டியூப்களில் இருந்த 1200 லிட்டர் மெத்தனாலையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
* பலி 60 ஆக உயர்வு: 20 பேர் டிஸ்சார்ஜ்
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம்தேதி விஷ சாராயம் குடித்து நேற்று முன்தினம் வரை 59 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜான்பாஷா(52) சிகிச்சை பலனின்றி சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 110 பேரில் 95 பேர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டனர். இதைதொடர்ந்து நேற்று 20 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களுக்கு அரசு மருத்துவ குழுவினர்கள், ஆரோக்கியமாக குடும்பத்துடன் வாழ சத்தான உணவுகளை சாப்பிடும்படி கவுன்சலிங் கொடுத்து அனுப்பினர்.
* புதுச்சேரி அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு
கைதான மாதேஷ் (19) பள்ளி படிப்பை முடித்து, புதுச்சேரியில் உள்ள ஒரு கேட்டரிங் கல்லூரியில் சேர்ந்து 2 மாதத்தில் படிப்பை நிறுத்தியுள்ளார். பின்னர் விழுப்புரத்தில் தனது தாயாருடன் வசித்துள்ளார். அவ்வப்போது மாதேஷ் மடுகரையில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
அப்போது சாராய விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்த மடுகரையைச் சேர்ந்த சாகுல்அமீது மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் மாதேசுக்கு பழக்கம் ஏற்படவே, மெத்தனால் சப்ளையில் சக நபர்களுடன் இணைந்து செயல்பட்டது அம்பலமாகி உள்ளது. இந்நிலையில் மாதேசுடன் தொடர்பில் இருந்த அரசியல் கட்சியினர் யார், யார்? என்பது குறித்து புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு போலீசாரும் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
The post சென்னை கெமிக்கல் கம்பெனிகளில் போலி பில் கொடுத்து 19 பேரல்களில் மெத்தனால் வாங்கிய புதுச்சேரி மாதேஷ்: நெட்வொர்க் அமைத்து சாராய வியாபாரிகளுக்கு சப்ளை, சிபிசிஐடி விசாரணையில் பகீர் தகவல்கள் அம்பலம் appeared first on Dinakaran.