காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்ய தேவையான 90 ஆயிரம் நடவு கன்றுகள் உற்பத்தி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் முசரவாக்கம் மாநில அரசு எண்ணெய் வித்துக்கள் பண்ணையில் 45 ஆயிரம் நொச்சி மற்றும் 45 ஆயிரம் ஆடாதொடா உயிரி பூச்சிக்கொல்லி பண்புடைய தாவரங்களின் கன்று உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கன்றுகளுக்கு உற்பத்தி செலவாக ₹7.50 லட்சம் செலவாகிறது. இத்திட்டத்தில், உற்பத்தி செய்யப்படும் தாவரங்களின் இலைகள், பயிர்களை தாக்கும் பூச்சிகளை விரட்டும் தன்மையுடையது. மேலும், விவசாய நிலங்களை சுற்றி உயிர்வேலி போன்ற அமைப்பாகவும் இருக்கும். எனவே, இதனை அரசு விதை பண்ணைகளில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு அதன் முழு விலையில் ₹2 மானியத்தில் வழங்கப்படவுள்ளது.
இந்த, நடவு கன்றுகளை உற்பத்தி செய்ய அதன் தாய் செடிகள் கொண்டுவரப்பட்டு, அதனை சிறு சிறு துண்டுகளாக்கி மண் கலவை நிரப்பப்பட்ட நெகிழி பைகளில் நடவு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. 2 மாத பராமரிப்புக்கு பின் நடவு செடிகளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கும் அனுப்பி விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.இப்பணிகளை வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி மையம்) சுமதி, சிறுகாவேரிப்பாக்கம் வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குநர் காளியம்மாள் ஆகியோர் ஆய்வு செய்து, தரமான கன்றுகள் உற்பத்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பண்ணை மேலாளர் சுந்தர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் வரதராஜ், யோகானந்தன் ஆகியோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90 ஆயிரம் நடவு கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.