செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சித்தாமூர், ஓணம்பாக்கம், விளங்கனூர், சரவம்பாக்கம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்படுகின்றன. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் பார் மண், கல் சக்கைகள் ஆகியவற்றை கனரக லாரிகளில் ஏற்றிக்கொண்டு சித்தாமூர் – சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக அதிவேகமாக செல்வதாக கூறப்படுகிறது. இந்த சாலையில் உள்ள இரும்புலி கிராமத்தில் நேற்று காலை ஆடுகள் சாலையைக் கடந்தபோது வேகமாக சென்ற கல்குவாரியின் கனரக லாரி ஆடுகளின் மீது மோதியது.
இதில், ஆறு ஆடுகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகின. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இளைஞர்கள், அப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய லாரி மற்றும் அந்த வழியாக சென்ற மேலும் சில கல்குவாரி லாரிகளை சிறை பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விபத்து குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
The post இரும்புலி கிராமத்தில் லாரி மோதி 6 ஆடுகள் பலி: கல்குவாரி லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள் appeared first on Dinakaran.