திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மலிவு விலை உணவு: மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் உணவகத்திற்கு நல்ல வரவேற்பு

திருப்பூர்: திருப்பூரில் தங்கி பணியாற்றிவரும் வெளியூர் தொழிலாளர்களுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் உணவகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திருப்பூர் மாநகரில் பின்னலாடை உற்பத்தி முக்கிய தொழிலாகும். அங்குள்ள நிறுவனங்களை நம்பி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பமாக தங்கி பணியாற்றி வருகின்றனர். தனியே தாங்கும் பணியாளர்களுக்கு பெரிய நிறுவனங்கள் தங்குமிடம் மற்றும் மெஸ் வசதிகளை செய்து தருகின்றன.

ஆனால் சிறிய நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இந்த வசதிகள் கிடைப்பதில்லை. இந்நிலையில் திருப்பூரை நம்பி பணியாற்றிவரும் வெளியூர் தொழிலாளிகளுக்கு உதவும் வகையில் ஆலங்காடு பகுதியில் மாநகராட்சி சார்பில் மக்கள் உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் நிர்வகித்து வரும் இந்த உணவகத்தில் காலை உணவாக 3 இட்லி ரூ.15, பொங்கல் கிச்சடி தலா ரூ.20, வடை ரூ.5க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. மத்திய சாப்பாடு ரூ.30க்கும், வெரைட்டி சாதங்கள் ரூ.15கும், தயிர்சாதம், வெஜ் பிரியாணி ரூ.20க்கும், ஒரு செட் சப்பாத்தி ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

மலிவு விலையில் உணவு கிடைப்பதால் நல்ல வரவேற்பு உள்ளதாக அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சியின் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியவர்கள் காய்கறி வெட்டுவது, பார்சல் தயார் செய்வது என பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டு அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படுகிறது. இதனால் அவர்கள் தனிமையை மறந்து வாழ்வாதாரம் பெற மக்கள் உணவகம் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. திருப்பூர் ஆலங்காடு பகுதியில் மட்டும் அமைந்துள்ள இந்த மக்கள் உணவகம் திருப்பூரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மலிவு விலை உணவு: மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் உணவகத்திற்கு நல்ல வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: