திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ஒன்றிய குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றிய குழுத்தலைவர் தங்கதனம் தலைமையில் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய குழு துணைத் தலைவர் இ.என்.கண்டிகை ஏ.ரவி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சந்தானம் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த கூட்டத்தில் 10 ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் வரவு செலவு கணக்கு தொடர்பான அறிக்கை வாசிக்கப்பட்டது. பின்னர், நடைபெற்ற வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். மழைகாலம் தொடங்க உள்ள நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், கிராம பகுதிகளில் சாலை, குடிநீர், தெரு விளக்கு, சுகாதாரம், தூய்மை பணிகள், அரசு கட்டிடங்கள் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினர்.
இறுதியில், ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.60 லட்சம், 15வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.74 லட்சம் உட்பட என மொத்தம் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) கிரிராஜ் நன்றி கூறினார்.
The post திருத்தணி ஒன்றியத்தில் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.