மக்களவை தேர்தலில் தோல்வி அரசு பங்களாவை காலி செய்ய 15 மாஜி அமைச்சர்களுக்கு நோட்டீஸ்: ஜூலை 5ம் தேதி வரை கெடு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் தோற்றதால் அரசு பங்களாவை காலி செய்ய 15 மாஜி அமைச்சர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வரும் ஜூலை 5ம் தேதி வரை கெடு கொடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 4ம் தேதி முடிந்துவிட்டதால் 17வது மக்களவை கலைக்கப்பட்டு, 18வது மக்களவையை அமைக்க தேவையான நடவடிக்கைகள் ஜனாதிபதி திரவுபதி முர்முவால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து 17வது மக்களவையில் இடம் பெற்று இருந்த ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள் தாங்கள் தங்கியிருந்த அரசு பங்களாவை ஜூலை 5ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை.

இந்நிலையில் ஒன்றிய நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தோட்டக்கலை இயக்குனரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘17வது மக்களவையில் ஒன்றிய அமைச்சர்களாக இருந்து, தற்போதைய தேர்தலில் தோல்வியடைந்த அமைச்சர்கள், 17வது மக்களவையில் எம்பிக்களாக இருந்து தற்போதைய தேர்தலில் தோற்றவர்கள், தேர்தலில் போட்டியிடாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கபட்டு இருந்த அரசு பங்களாக்களை ஜூலை 5ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில், முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் ஆர்கே சிங், மகேந்திர நாத் பாண்டே, ஸ்மிருதி இரானி, அர்ஜுன் முண்டா, சஞ்சீவ் பலியான், ராஜீவ் சந்திரசேகர், கைலாஷ் சவுத்ரி, அஜய் மிஸ்ரா தேனி, வி.முரளீதரன், நிஷித் பிரமானிக், சுபாஷ் சர்க்கார், சாத்வி நிரஞ்சன் ஜோதி, ராவ்சாஹேப் தன்வே, ராவ்சாஹேப் கான்த்வே ஆகிய 15 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு பங்களாவை வரும் ஜூலை 11ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post மக்களவை தேர்தலில் தோல்வி அரசு பங்களாவை காலி செய்ய 15 மாஜி அமைச்சர்களுக்கு நோட்டீஸ்: ஜூலை 5ம் தேதி வரை கெடு appeared first on Dinakaran.

Related Stories: