சோகத்தில் மிதக்கும் கள்ளக்குறிச்சி விஷசாராய பலி 43 ஆக உயர்வு: மேலும் 24 பேர் கவலைக்கிடம்; சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 24 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோமுகி ஆற்றங்கரை அருகே நந்தவனம் பகுதியில் 18ம்தேதி இரவு சாராயம் வாங்கி குடித்த பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. அவர்களுக்கு வயிற்று வலி, கண்பார்வை இழப்பு என பாதிப்புகள் ஏற்பட்டன. முதலில் அடுத்தடுத்து 2 பேர் இறந்தனர். இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 85க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் காலையில் இருந்து சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இவர்களில் நேற்று முன்தினம் 17 பேர் இறந்தனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 25 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 11 பேர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேர், புதுவை ஜிப்மரில் 3 பேர் என மொத்தம் 43 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 37 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை. மேலும் 90 பேருக்கு தொடர்ந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுவை ஜிப்மரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 7 பேரும், சேலம் மருத்துவமனையில் 8 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் ஒருவர், புதுவை ஜிப்மரில் 8 பேர் என மொத்தம் 24 பேர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருவதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அவர்களில் பலரும் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவக்குழுவினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் அடுத்தடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரை கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி, சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அங்கு சென்று அமைச்சர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மதுவிலக்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஏடிஜிபி அருண் தலைமையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விஷ சாராய சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பிரசாந்த் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்பி சமய்சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் உடனடியாக பதவியேற்றுக் கொண்ட நிலையில் அவர்கள் மீட்பு, நிவாரண மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கலெக்டர் பிரசாந்த், விஷசாராயம் குடித்தவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்று நேற்று ஆய்வு செய்தார். அப்போது, விஷசாராய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றார். விஷசாராயம் விற்பனை செய்ததாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதுதவிர மேலும் 8 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாக கள்ளக்குறிச்சியில் விசாரணையை துவங்கி உள்ளார். இதற்கிடையே விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று காலை சிபிசிஐடி உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் விஷ சாராய சம்பவம் தொடர்பாக 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நேற்று மாலை கள்ளக்குறிச்சி சென்று சம்பவம் நடந்த கருணாபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* உள்துறை செயலாளர் நேரில் ஆய்வு
கள்ளக்குறிச்சியில் விஷ சாராய பலி தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்சர் ஜிவால் ஆகியோர் 2 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து உள்துறை செயலாளர் அமுதா நேற்று கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கு நேரில் சென்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர் அப்பகுதியில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அங்குள்ள அரசு பள்ளி நிவாரண முகாம் இடத்திற்கு வந்த உள்துறை செயலாளர் அமுதா, நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன் அங்கு ஆய்வு நடத்தினார். அப்போது தாய்- தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

The post சோகத்தில் மிதக்கும் கள்ளக்குறிச்சி விஷசாராய பலி 43 ஆக உயர்வு: மேலும் 24 பேர் கவலைக்கிடம்; சிபிசிஐடி விசாரணை தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: