நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் சட்டப்பேரவை நாளை கூடுகிறது: 29ம் தேதி வரை மானிய கோரிக்கை மீது விவாதம்

சென்னை: நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. வருகிற 29ம் தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில், மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்தப்படுகிறது. முதல் நாள் கூட்டத்தில், மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி அன்றைய தினம் பேரவை கூட்டம் ஒத்தி வைக்கப்படும். அதைத்தொடர்ந்து வரும் 21ம் தேதி (வெள்ளி) காலை 10 மணிக்கு சட்டப்பேவை கூடும்.

காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டசபை நிகழ்வுகளை காலை 9.30 மணிக்கு தொடங்குவது தொடர்பாக விதிகள் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை கூடியதும் விதிகள் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்.

அதையடுத்து வரும் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை காலை 9.30 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கும். வரும் 29ம் தேதி தவிர 21ம் தேதி முதல் 28ம் தேதி ஆகிய நாட்களில் காலை, மாலை என 2 பிரிவுகளாக கூட்டம் நடக்கும். காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சட்டப்பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மானியக்கோரிக்கை மசோதா மீதான விவாதம் 8 நாள் மட்டுமே நடத்தப்படுகிறது.

29ம் தேதி முதல்வர் பதிலுரை
21ம் தேதி (வெள்ளி) நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் ஆகிய துறை மீது விவாதம் நடத்தப்பட்டு அந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கப்படும். அன்றைய தினம் மாலை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீது விவாதம் நடத்தப்படும். 22ம் தேதி காலை உள்ளாட்சி துறை, மாலை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம், 23ம் தேதி (ஞாயிறு) அரசு விடுமுறை,

24ம் தேதி காலை உயர் கல்வி துறை, வருவாய் துறை, பள்ளி கல்வி துறை, மாலை நீதி நிர்வாகம், சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரம், தமிழ் வளர்ச்சி துறை, 25ம் தேதி காலை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனத்துறை, மாலை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கைத்தறி, போக்குவரத்து துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,

26ம் தேதி காலை திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, மாலை சுற்றுலா துறை, வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு துறை, இந்து சமய அறநிலைய துறை, 27ம் தேதி காலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, கைத்தறி மற்றும் துணிநூல், மாலை கூட்டுறவு துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, 28ம் தேதி காலை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சுகாதார துறை, தகவல் தொழில்நுட்பவியல், தொழில் துறை, மாலை காவல், தீயணைப்பு, 29ம் தேதி காவல், தீயணைப்பு துறை மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிப்பார். மேலும் 29ம் தேதி அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தலும் நிறைவேற்றப்படும்.

The post நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் சட்டப்பேரவை நாளை கூடுகிறது: 29ம் தேதி வரை மானிய கோரிக்கை மீது விவாதம் appeared first on Dinakaran.

Related Stories: