ரேபரேலி எம்பியாக நீடிக்க முடிவு வயநாடு எம்.பி பதவி ராகுல் ராஜினாமா: இடைத் தேர்தலில் பிரியங்கா போட்டி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி ரேபரேலி தொகுதி எம்.பியாக நீடிக்க முடிவு செய்துள்ளார். வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் ராஜினாமா செய்கிறார். அந்த தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, நடந்து முடிந்த மக்களவை தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்றார்.

இந்நிலையில் முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் அவர் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்நிலையில் எந்த தொகுதியை ராகுல் காந்தி பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்கான காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அவரது வீட்டில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியாகாந்தி, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொது செயலாளர்கள் வேணுகோபால், பிரியங்கா காந்தி மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ராகுல்காந்தி எந்த தொகுதியில் எம்பியாக இருப்பது அல்லது எந்த தொகுதியை ராஜினாமா செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மக்களவையில் எதிர்கட்சி தலைவர் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்பது குறித்தும் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கார்கே, ‘ரேபரேலி தொகுதியில் ராகுல் எம்பியாக நீடிப்பார். வயநாடு தொகுதியை அவர் ராஜினாமா செய்வார். மேலும் வயநாடு மக்களவை தொகுதியில் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்’ என்றும் தெரிவித்தார்.

* வயநாடு, ரேபரேலிக்கு 2 எம்பிக்கள் கிடைக்கும்
ராகுல்காந்தி தன்னை வெற்றி பெற செய்த வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். அவர் கூறியதாவது: ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளுடனும் உணர்ச்சிபூர்வமான தொடர்பைக் கொண்டிருப்பதால், இது எனக்கு கடினமான முடிவு. வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த ஐந்து வருடங்கள் மிகவும் அருமையான, மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. வயநாட்டு மக்கள் எனக்கு ஆதரவையும், அன்பையும், மிகவும் இக்கட்டான நேரத்தில் போராடும் ஆற்றலையும் கொடுத்தனர். அதை என்னால் மறக்க முடியாது. தொடர்ந்து வயநாடுக்கு வருவேன். வயநாட்டுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் 2 எம்.பி.க்கள் கிடைக்கும். எனக்கு ரேபரேலியுடன் பழைய உறவு உள்ளது. நான் அதை பிரதிநிதித்துவப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எளிதான முடிவு அல்ல. இவ்வாறு அவர் கூறினார். ராகுல் இல்லாததை வயநாடு மக்கள் உணர விடமாட்டேன் என்று பிரியங்கா காந்தி கூறினார்.

* எந்த பதற்றமும் இல்லை; பிரியங்கா
பிரியங்கா கூறுகையில்,’ ராகுல் இல்லாததை வயநாடு மக்கள் உணர விடமாட்டோம். வயநாட்டின் பிரதிநிதியாக வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் சொல்வதெல்லாம் ராகுல் இல்லாததை அவர்கள் உணர விடமாட்டேன். ராகுல் சொன்னது போல் என்னுடன் அவர் பலமுறை வயநாடு வருவார். ஆனால் நான் கடினமாக உழைக்கிறேன். அதற்காக இன்னும் முயற்சி செய்வேன். அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்து, ஒரு நல்ல எம்பியாக இருப்பேன்.ரேபரேலியில் நான் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருவதால், அந்த உறவு ஒருபோதும் முறியாது. வயநாட்டில் தேர்தல் களத்தில் அறிமுகமாகவிருப்பதால் எனக்கு எந்தவித பதற்றமும் இல்லை’ என்றார்.

* ராகுல் முடிவு வரவேற்கத்தக்கது: ஆனிராஜா
ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக்கொள்ளும் ராகுல் காந்தியின் முடிவு வரவேற்கத்தக்கது என்று வயநாட்டில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவிய இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனிராஜா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’ உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ளும் ராகுல் முடிவு வரவேற்கத்தக்கது. நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில், ராகுல் காந்தி போன்ற ஒரு முக்கிய தலைவர் இந்தி பேசும் மாநிலத்தில் பணியாற்றுவது அவசியம். எனவே அவரது முடிவில் எந்த தவறும் இல்லை. வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு பெண்ணை களமிறக்க முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் கடந்த ஆண்டை விட இம்முறை குறைந்துள்ளது. எனவே, அதிக பெண்கள் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்று அவர் கூறினார்.

The post ரேபரேலி எம்பியாக நீடிக்க முடிவு வயநாடு எம்.பி பதவி ராகுல் ராஜினாமா: இடைத் தேர்தலில் பிரியங்கா போட்டி appeared first on Dinakaran.

Related Stories: