இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் ரூ.3.80 கோடியில் 4,737 பேருக்கு மருத்துவ சிகிச்சை: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் 4,737 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட திட்டமே இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டமாகும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், சட்டமன்ற தேர்தலில்போது அளித்த வாக்குறுதிப்படி 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.

அதன்படி, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில், இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை, அனைத்து தரப்பு மக்களிடத்திலும் இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவினங்களை குறைக்கும் இந்த உயிர்காக்கும் உன்னத திட்டத்தின் கீழ் விபத்து நிகழும் பகுதிகளுக்கு அருகாமையிலுள்ள 683 மருத்துவமனைகளில், ரூ.213.47 கோடி செலவில் 2.45 லட்சம் நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 4,737 நபர்களுக்கு, 3 கோடியே 80 லட்சத்து 18 ஆயிரத்து 176 ரூபாய் செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் ரூ.3.80 கோடியில் 4,737 பேருக்கு மருத்துவ சிகிச்சை: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: